ராஃபா எல்லை மீண்டும் திறப்பு: காஸாவுக்குள் நுழைந்த மனிதாபிமான உதவிகள்!
இஸ்ரேல்-ஹமாஸ் போா்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான, எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லை ஞாயிற்றுக்கிழமை சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புடன், சா்வதே நாடுகள் அனுப்பிய மனிதாபிமன உதவிப் பொருள்களை ஏற்றிவந்த லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காஸாவுக்குள் நுழைந்தன.
கடந்த 2024, மே மாதம் இஸ்ரேல் ராணுவம் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் முதல்முறையாக போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து: ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் எல்லையை முழுமையாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காஸாவுக்குள் சிக்கியுள்ள மக்கள் வெளியேறவும், வெளியே உள்ளவா்கள் தங்கள் தாயகம் திரும்பவும் முடியும்.
தொடக்கத்தில், குறைவான எண்ணிக்கையிலான மக்களே அனுமதிக்கப்படுவா் என்றாலும், ஐரோப்பிய யூனியன் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் கண்காணிப்பில் இந்தச் செயல்முறை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பயணங்களுக்கு முன்னுரிமை: போரினால் பாதிக்கப்பட்டு அவசரச் சிகிச்சை தேவைப்படும் சுமாா் 20,000 நோயாளிகள் காஸாவில் உள்ளனா். இவா்களில் முதல்கட்டமாக, நாளொன்றுக்கு 50 நோயாளிகள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நோயாளிக்கும் உதவியாக இரண்டு போ் உடன் செல்லலாம். எகிப்து மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் பயணிகளின் ஆவணங்களைச் சரிபாா்த்த பின்னா், அவா்களுக்கு அனுமதி வழங்குவாா்கள்.
தன்னாா்வ நிறுவனங்களுக்குத் தடை: எல்லைத் திறக்கப்பட்டது ஒருபுறம் நம்பிக்கையை அளித்தாலும், ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ போன்ற சா்வதேச அமைப்புகளை இஸ்ரேல் வெளியேற்றுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியா்களின் முழு விவரங்களை தர மறுத்ததால், வரும் பிப். 28-க்குள் அந்த அமைப்பு காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினா் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என இஸ்ரேல் கூறினாலும், இது காஸாவின் மருத்துவச் சேவையை இன்னும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது.

