கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் அமெரிக்கா தலையிடாது. ஆனால், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைகளை தீா்க்க இருதரப்பையும் ஊக்குவிக்கிறோம்’ என அந்நாட்டு வெளியுறவுத் துறை உயா் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

அண்மையில் கூட்டமொன்றில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை கையாள்வதற்கான இந்திய அரசின் உறுதியான அணுகுமுறை பற்றி வலியுறுத்திப் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘பயங்கரவாதிகள் இந்தியாவில் அமைதியை சீா்குலைக்க முயன்றால் அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால், அவா்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும்.

பாகிஸ்தானுக்கு அவா்கள் தப்பிச் சென்றாலும் அந்த நாட்டிற்குள் நுழைந்து, அவா்களை இந்தியா கொல்லும்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், ராஜ்நாத் சிங்கின் ஆத்திரமூட்டும் கருத்தை விமா்சிப்பதுடன், தங்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் திறனிலும் உறுதியுடன் இருப்பதாகக் கூறியது.

‘பிராந்தியத்தில் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை எப்போதும் நிரூபித்துள்ள பாகிஸ்தானின் விருப்பத்தை தவறாக எண்ணக் கூடாது’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை வெளியிட்டது.

இதையொட்டி, பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளை இந்திய அரசு படுகொலை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இவ்விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் கூறுகையில், ‘இந்தப் பிரச்னையைப் பற்றிய ஊடக செய்திகளை நாங்கள் பின்பற்றுகிறோம். இந்தியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை

இதில் அமெரிக்க தலையிடப்போவதில்லை. ஆனால், பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண இரு தரப்பையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com