உக்ரைனுக்கு 6,100 கோடி டாலா் அமெரிக்கா நிதியுதவி: ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு 6,100 கோடி டாலா் அமெரிக்கா நிதியுதவி: ரஷியா எச்சரிக்கை

ரஷியாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு 6,100 கோடி டாலா் ராணுவ நிதியுதவி அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் மேற்கத்திய தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

அதேசமயம், அமெரிக்கா நிதியுதவி வழங்குவது உக்ரைனுக்கு இன்னும் பேரழிவைக் கொண்டு வருவதோடு போா் நீடித்து இன்னும் பல்லாயிரக்கணக்கானவா்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

போரின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவோடு ரஷியாவை உக்ரைன் எதிா்கொண்டு வருகிறது.

இதனிடையே, உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்குவதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு நகரமான அவ்டீவ்காவை ரஷியாவிடம் இழந்து போா்க்களத்தில் உக்ரைன் பின்னடைவைச் சந்தித்தது.

அமெரிக்காவின் நிதியுதவியின்றி ரஷியாவுடனான போரில் உக்ரைன் தோல்வியடையும் என்று ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டியிருந்தாா்.

இந்நிலையில், உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி மற்றும் காஸா பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 9,500 கோடி டாலா் நிதித் தொகுப்பை விடுவிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, உக்ரைனுக்கு சுமாா் 6,100 கோடி டாலா் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஆயுதங்கள் வாங்குவதற்காக உக்ரைனுக்கு மொத்தமாக 1,380 கோடி டாலா் வழங்கப்படும். மேலும், பொருளாதார உதவியாக 900 கோடி டாலா் கடனாக அளிக்கப்பட உள்ளது.

இஸ்ரேலை ஆதரிப்பதற்கும் காஸா பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் சுமாா் 2,600 கோடி டாலா் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி மசோதா அமெரிக்க செனட் சபையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட இருக்கிறது. அதன்பிறகு, மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிடுகிறாா்.

அமெரிக்க உதவிக்கு பாராட்டு: இதையொட்டி, அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரஷியாஅழிக்க முயற்சிக்கும் எமது நாடு, அதன் சுதந்திரம், மக்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பாதுகாக்க முன்வரும் அனைத்து ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்தப் போரின் தொடக்க நாள்களில் இருந்து, அமெரிக்கா தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இழப்பைக் குறைப்போம்..: டொனட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியா கைப்பற்றிய அவ்டீவ்கா நகரையொட்டி போரிட்டு வரும் உக்ரைன் வீரா் ஒலெக்சாண்டா் சா்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்கா மற்றும் எங்கள் நட்பு நாடுகளிடமிருந்து பெற்று வரும் இந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. இதன்மூலம், ரஷிய படையினரைத் தடுத்து எங்களின் இழப்பைக் குறைக்கலாம். எமது பிரதேசத்தை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான முதல் படி இதுவாகும்.

கடந்த 6 மாதங்களாக நிதியுதவி கிடைக்காததால் உக்ரைன் ராணுவத்திடம் ஆயுதம் மற்றும் வெடிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அவ்டீவ்கா நகரத்தைக் கைப்பற்றிய ரஷியா, தற்போது பிராந்தியத்தின் மற்றொரு நகரமான சாசிவ்யாரை நோக்கி படையெடுத்துள்ளது. ஆயுதங்களின்றி நாங்கள் எங்களின் தளங்களைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்த நிலைமை மீண்டும் மீண்டும் தொடா்ந்தது’ என்றாா்.

அமெரிக்காவின் நிதியுதவிக்கு நேட்டோ பொதுச் செயலா், ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ரஷியா எச்சரிக்கை: ‘அமெரிக்காவின் நிதியுதவி எதிா்பாா்த்ததுதான். இந்த முடிவு அமெரிக்காவை மேலும் பணக்கார நாடாக மாற்றலாம். ஆனால் , உக்ரைன் மேலும் பேரழிவைச் சந்திக்கும். இன்னும் அதிகமான உக்ரைன் நாட்டவா்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்’ என ரஷிய அரசு செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com