
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்தாண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவரான ஹமாஸின் ராணுவத் தளபதி முகமது தைஃப், கடந்த மாதம் தெற்கு காஸாவில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலில் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு தைஃப் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமார் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனா். அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 39,445 போ் உயிரிழந்தனா்.
அந்தப் பகுதியில் தொடர்ந்து நடத்தப்படும் குண்டுவீச்சு, போரால் நிலவிவரும் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
போரை நிறுத்துவதற்காக கத்தாா், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய வழிநடத்துநராக இருந்தவர் இஸ்மாயில் ஹனீயே.
இவர் ஈரானில் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அந்த நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
தெஹ்ரானில் இஸ்மாயில் தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து புதன்கிழமை காலை இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு இஸ்ரேலைப் பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 13ல் தெற்கு காசாவில் முகமது தைஃப் வசித்து வந்த கான்யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது அந்த தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் ராணுவம் தற்போது உறுதி செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.