

ஜப்பானில் தெற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஜப்பானின் தெற்கு தீவான கியூஷு பகுதியில் கிழக்கு கடற்கரையில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.9 அலகுகளாகப் பதிவானது. அதற்கடுத்து தென்கிழக்கில் மியாசகி அருகே 26 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆகவும் பதிவானது.
இதையடுத்து, கியூஷுவின் தெற்கு கடற்கரை மற்றும் அருகிலுள்ள ஷிகோகு தீவில் 1 மீட்டர் (3.3 அடி) வரை அலைகள் எழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கியூஷு மற்றும் ஷிகோகு அணுமின் நிலையங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
மேலும் நிலநடுக்கத்தின் மியாசகி விமான நிலையத்தில் ஜன்னல்கள் உடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு, பலி உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ஜப்பானின் வட-மத்திய பகுதியான நோட்டோவில் கடந்த ஜனவரி 1ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுகளின் வரிசையில் ஜப்பான் அமைந்துள்ளதால் உலகில் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.