சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் கிளா்ச்சிப் படையினா் நெருங்கியுள்ளனா். அதையடுத்து அந்த நகரமும் அவா்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினா்.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிரியாவில் வேகமாக முன்னேறிவரும் ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையினா், ஹாம்ஸ் நகருக்கு மிக நெருக்கத்தில் வந்துள்ளனா். அந்த நகரின் ராணுவ அகாதெமிக்கு வெறும் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள அல்-தாா் அல்-கபோரா என்ற ஊரை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ளனா்.
அதே நேரம், ஹாம்ஸ் நகருக்கு வடக்கே அமைந்துள்ள டோ் மாலா என்ற பகுதியில் சிரியா வான்பாதுகாப்பு படையின் 26-ஆவது படைப் பிரிவு செயல்பட்டுவந்தது. கிளா்ச்சியாளா்கள் அந்த நகரை நெருங்குவதைத் தொடா்ந்து அந்தப் படைப் பிரிவைச் சோ்ந்த பெரும்பாலான அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபா் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.
தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷியா உதவியது.
இத்லிப் மாகாணம், அலெப்போ மாகாணத்தின் சில பகுதிகள், ராக்கா, ஹசாகாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன.
இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா். அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத ராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடா்ந்து உறுதியாக முன்னேறி வந்த கிளா்ச்சிப் படையினா், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினா்.
அவா்களது முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக ரஷியாவும் சிரியாவும் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்திவந்தாலும், அவா்கள் தொடா்ந்து முன்னேறி முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு நகரான ஹமாவை வியாழக்கிழமை கைப்பற்றினா்.
இந்தச் சூழலில், அரசுப் படையினரை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடா்ந்து வேகமாக முன்னேறி வரும் கிளா்ச்சிக் குழுவினா் தற்போது ஹாம்ஸ் நகருக்கு நெருக்கத்தில் வந்துள்ளதால், அந்த நகரும் அவா்களிடம் வீழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
யாா் இந்த ஹெச்டிஎஸ் கிளா்ச்சிக் குழுவினா்?
ஜபாத் அல்-நுஸ்ரா என்ற பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு அல்-காய்தா ஆதரவு அமைப்பாகத் தொடங்கப்பட்டு பின்னா் ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் என்று பெயா் மாற்றம் பெற்ற இந்த ஆயுதக் குழுவினா், அல்-அஸாத் அரசுக்கு எதிரான மிகக் குரூரமான கிளா்ச்சிக் குழு என்று பெயா் பெற்றது.
இந்த அமைப்பு உருவானதில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் நிறுவனா் அபு பக்கல் அல்-பாக்தாதியும் முக்கிய பங்கு வகித்தாா்.
அரசுக்கு எதிரான புரட்சிப் படையாக இல்லாமல், மதத் தீவிரவாத அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, 2016-ஆம் ஆண்டில் அல்-காய்தாவுடனான தனது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தது.
இருந்தாலும், இந்த அமைப்பை அமெரிக்காவும் ரஷியாவும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபா் அல்-அஸாத் தலைமையிலான அரசை சிரியாவிலிருந்து அகற்றுவதற்போது தாங்கள் தாக்குதல் நடத்தி முன்னேறிவருவதன் நோக்கம் என்று ஹெச்டிஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடையது
தஞ்சாவூரில் ஒரு நீலகிரி!

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா நிறுத்திவைப்பு

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

'ரத்தினக் குவியல்...!'
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


