ஏன் இங்கே இருக்கிறேன்? தென்கொரிய விமான விபத்தில் உயிர் தப்பியவர் கேள்வி!
நான் ஏன் இங்கே இருக்கிறேன்? தென்கொரிய விமான விபத்தில் உயிர் தப்பியவர் கேள்வி எழுப்பியவாறு இருக்கிறார்.


தென்கொரிய விமான விபத்தில் சிக்கி அதிலிருந்து 2 பேர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில், நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தனக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாமல் கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறன்று, தென்கொரியாவின் முவான் சா்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற பயணிகள் விமானம், கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா். 2 விமானப் பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்து உயிருடன் மீட்கப்பட்ட விமானப் பணியாளர்களில் ஒருவரான 32 வயதாகும் லீ, மோக்போ கொரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லீ, தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று திரும்பத் திரும்ப மருத்துவர்களிடமும் மருத்துவப் பணியாளர்களிடமும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பாததால், அவர் விமான விபத்தின் அதிர்ச்சியால் மனநிலை தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லீயின் இடது தோள்பட்டை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சுயநினைவுடன்தான் இருக்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
தென்கொரியாவின் தலைநகா் சியோலுக்கு தெற்கே 290 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முவான் நகரம். தென்கொரியாவைச் சோ்ந்த ‘ஜேஜு ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து முவானை நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது, விமானத்தின் முன்சக்கரத்தின் (லேண்டிங் கியா்) செயல்பாட்டில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. விமானத்தின் மீது பறவை மோதி இதுபோல நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, லேண்டிங் கியரை பயன்படுத்தாமல் (பெல்லி லேண்டிங் முறையில்) விமானத்தை நேரடியாகத் தரையிறக்க முயற்சிக்கப்பட்டபோது விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விபத்திலிருந்து தப்பிய 25 வயது விமானப் பணிப்பெண்ணான க்வான், தலை, அடிவயிற்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவுகூர இயலாத நிலையில்தான் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அவரிடம் விபத்து குறித்து யாரும் எதுவும் பேசவில்லை என்றும், அது அவருக்கு தேவையில்லாத மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அமைதியான முறையில் சிகிச்சை பெறுவதை உறுதி செய்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...