பிரான்சில் சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம்!

பிரான்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடரப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்கள்
பிரான்சில் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்கள்

பாரிஸ் : பிரான்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக மனம் குமுறும் விவசாயிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகளை அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் கழிவுகளை  அரசு அலுவலக வாயில்களில் கொட்டி, அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயிகளின் தொடர் சாலை மறியல் போராட்டத்தால், பிரான்சிலிருந்து ஸ்பெயினுக்கு செல்லும் முக்கியச் சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, பிரான்சின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள  கப்ரியேல் அட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று(ஜன.26) பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

எனினும், அரசின் இந்த அறிவிப்புகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள விவசாய சங்கங்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. மேலும், நாளை(ஜன.28) முதல் தலைநகர் பாரிஸை சுற்றியுள்ள சாலைகளை மறித்து போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

பிரான்ஸ் மட்டுமன்றி, கடந்த சில வாரங்களில், அதன் அண்டை நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து மற்றும் ருமேனியாவிலும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com