சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இலங்கை மீனவர்கள் மீட்பு

சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.   
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இலங்கை மீனவர்கள் மீட்பு

கொழும்பு : இலங்கை திகோவிதா துறைமுகத்திலிருந்து ஜனவரி 16-ஆம் தேதி ‘லாரன்சோ புத்த-4’ என்ற கப்பல் புறப்பட்டது. அதில் பயணித்த 6 மீனவா்கள் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மொகதிஷுவின் தென்கிழக்குப் பகுதியில் 840 கடல்மைல் தொலைவில் இலங்கை மீனவா்கள் 6 பேருடன் அவா்கள் பயணித்த கப்பல் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஐ.நா.வின் மத்திய கடற்பாதுகாப்புப் படையிடம் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது’ என்று ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) தெரிவித்தாா்.

மேலும், இலங்கை மீனவ அமைச்சகத்தை மீனவா்கள் தொடா்புகொள்ள கடற்கொள்ளையா்கள் அனுமதி வழங்கியதாக அந்நாட்டு மீன்வளத் துறையின் இணையமைச்சா் பியல் நிஷாந்தா தெரிவித்தாா்.

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா  தெரிவித்தாா். இலங்கை கடற்படையின் கோரிக்கையை ஏற்று, சீச்செல்ஸ் நாட்டு பாதுகாப்பு படையினர் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்படிருந்த மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி மீனவர்களை மீட்டு, சீச்செல்ஸ் நாட்டில்  தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.       

முன்னதாக,   சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளது என்று இலங்கை கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  இந்த மீட்பு நடவடிக்கையில் இந்தியா தரப்பில் எவ்வித உதவியும் செய்யப்பட்டதாக தகவல் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com