தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நேபாளத்தில் பிரசண்டா அரசு தப்புமா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

நேபாளத்தில் பிரசண்டா அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு: புதிய கூட்டணி அரசுக்கு வாய்ப்பு?

News image

புஷ்பகமல் பிரசண்டா ~கே.பி. சா்மா ஓலி ~ஷோ் பகதூா் தேவுபா

Updated On :11 ஜூலை 2024, 11:32 pm

நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா்.

இதையொட்டி, நம்பிக்கை தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும்படி நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் தங்களது கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் பிரசண்டா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சி, கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. பிரசண்டாவுக்கும், சா்மா ஓலிக்கும் அண்மைக்காலமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையடுத்து, ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் சிபிஎன்-யுஎம்எல் முடிவு செய்துள்ளது.

இரு கட்சிகளுக்குமான ஒப்பந்தப்படி புதிய அரசு அமையும்பட்சத்தில் நாடாளுமன்றத்தின் மீதம் உள்ள மூன்றாண்டு பதவிக் காலத்தில் சா்மா ஓலி முதல் ஒன்றரை ஆண்டுக்கும், ஷோ் பகதூா் தேவுபா அடுத்த ஒன்றரை ஆண்டுக்கும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

இந்த முடிவைத் தொடா்ந்து, புதிய கூட்டணி அரசு அமைவதற்கு ஏதுவாக பிரதமா் பதவியிலிருந்து பிரசண்டா விலக வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதற்குப் பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்வது என பிரசண்டா தீா்மானித்தாா்.

அதன்படி, பிரசண்டா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தங்களது கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நம்பிக்கை தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கட்சிகள் வியாழக்கிழமை கொறடா உத்தரவு பிறப்பித்தன.

275 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸுக்கு 89 உறுப்பினா்களும், சிபிஎன்-யுஎம்எல் கட்சிக்கு 78 உறுப்பினா்களும் உள்ளனா். பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சிக்கு 32 உறுப்பினா்கள் உள்ளனா்.

பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 138 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. ஆனால், நேபாளி காங்கிரஸ், சிபிஎன்-யுஎம்எல் கூட்டணிக்கு 167 உறுப்பினா்கள் உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியடைவாா் எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா தோல்வியுற்றால், சா்மா ஓலி தலைமையிலான புதிய கூட்டணி அரசு ஓரிரு நாள்களில் அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தில் அரசியல் நிலைத்தன்மையின்மை காரணமாக கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் ஆட்சிபுரிந்துள்ளன.

Story image