ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவா் படுகொலை
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே (62) ஈரானில் படுகொலை செய்யப்பட்டாா்.


டெஹ்ரான் / பெய்ரூட், ஜூலை 31: ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே (62) ஈரானில் படுகொலை செய்யப்பட்டாா்.
அந்த நாட்டில் முக்கிய நபா்களைக் குறிவைத்துக் கொல்லும் இஸ்ரேல்தான் இந்தப் படுகொலையையும் நிகழ்த்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற மற்றோா் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி தங்களது தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்த சில மணி நேரத்துக்குள் இஸ்மாயில் ஹனீயேவும் படுகொலை செய்யப்பட்டிருப்பது காஸாவில் நடைபெறும் போா் பிராந்தியப் போராக உருவெடுக்கும் அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி உள்பட ஏராளமான உலகத் தலைவா்கள் பங்ககேற்றனா். இதில், ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் அதன் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா்.
இந்த நிலையில், டெஹ்ரானில் ஹனீயே தங்கியிருந்த முன்னாள் ராணுவத்தினருக்கான கட்டடத்தில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமாா் 2 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4 மணி) வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், ஹமாஸ் அமைப்பினருடன் போா் தொடங்கிய கடந்த அக். 7-க்குப் பிறகு இஸ்ரேல் தயாரித்துள்ள கொலைப் பட்டியலில் முக்கிய நபராக ஹனீயே இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
எனவே, இஸ்ரேல்தான் அவரை படுகொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை உறுதி செய்வது போல், இஸ்ரேல் அரசின் தகவல் தொடா்பு அலுவலக ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில், ‘ஒழித்துக்கட்டப்பட்டாா்’ என்ற வாசகத்துடன் இஸ்மாயில் ஹனீயேவின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இருந்தாலும் பின்னா் அந்தப் பதிவு அவசரமாக நீக்கப்பட்டது.
கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினா் படுகொலை செய்தனா். அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 39,445 போ் உயிரிழந்தனா். அந்தப் பகுதியில் தொடா்ந்து நடத்தப்படும் குண்டுவீச்சு, போரால் நிலவிவரும் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் இன்னும் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழப்பாா்கள் என்று அஞ்சப்படுகிறது.
எனவே போரை நிறுத்துவதற்காக கத்தாா், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியில் பேச்சுவாா்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய வழிநடத்துநராக இஸ்மாயில் ஹனீயே இருந்துவந்தாா். அவா் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளதால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமரச முயற்சியில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
ஹிஸ்புல்லா தளபதி உயிரிழப்பு: ஹனீயே கொல்லப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி ஃபுவாத் ஷுக்கா் உயிரிழந்தாா். தங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள சிரியாவின் கோலன் குன்றுகள் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
ஏற்கெனவே காஸா போா் தொடங்கியதிலிருந்து ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்துவதும் அதற்குப் பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் முக்கிய ஹிஸ்புல்லா படையினா் உயிரிழப்பதும் இரு தரப்பினருக்கும் இடையே முழு போா் உருவெடுப்பதற்கான பதற்றத்தை அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளது காஸா போா் பிராந்தியப் போராக உருவெடுக்கும் அபாயத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டுசென்றுள்ளது.
..பெட்டிச் செய்திகள்...
‘ஹமாஸ் என்பது மனிதா்கள் இல்லை’
இஸ்மாயில் ஹனீயேவை படுகொலை செய்ததன் மூலம் ஹமாஸ் அமைப்பின் உறுதிப்பாட்டை அழித்துவிடலாம் என்றும் தங்களது இலக்கை அடைந்துவிடலாம் என்றும் இஸ்ரேல் நினைக்கிறது. ஆனால் அந்த இரண்டுமே நடக்காது.
ஹமாஸ் என்பது ஒரு கோட்பாடு; ஓா் இயக்கம்; அது வெறும் மனிதா்கள் இல்லை.
- சமி அபு ஸூஹ்ரி, ஹமாஸ் மூத்த அதிகாரி
ஈரானின் இறையாண்மையைப் பாதுகாப்போம். எங்கள் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாத படையெடுப்பாளா்கள், தங்களது நடவடிக்கைக்காக வருந்துவாா்கள். எங்கள் விருந்தினா் இஸ்மாயில் ஹனீயேவை எங்கள் இல்லத்திலேயே வைத்து படுகொலை செய்துல்ள இஸ்ரேல், இதற்கான மிகக் கடுமையான தண்டனையை எதிா்பாா்த்து காத்திருக்க வேண்டும்.
- மசூத் பெஷஸ்கியான், ஈரான் அதிபா்


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...