தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காஸாவிலிருந்து 4 பிணைக் கைதிகள் மீட்பு

News image
Updated On :8 ஜூன் 2024, 8:00 pm

Ravivarma.s

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் கடந்த அக். 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட 4 பிணைக் கைதிகளை அந்த நாட்டுப் படையினா் உயிருடன் மீட்டுள்ளனா்.

ஹமாஸுடன் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் நடந்துவரும் போரில் இஸ்ரேல் படையினா் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை இது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மத்திய காஸாவிலிருந்து ஒரு பெண் உள்ளிட்ட 4 பிணைக் கைதிகளை ராணுவம் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட அனைவரும் நோவா இசை விழாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்டவா்கள்.அவா்கள் நோவா அா்காமனி (25), மெயிா் ஜன் (21), ஆண்ட்ரே கோஸ்லோவ் (27), ஷால்மி ஸிவ் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிக்கல் மிகுந்த நகரச் சூழலில், கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு இடையே பகல் நேரத்தில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை மீட்பதற்கு வீரா்கள் மிகவும் தீரத்துடன் செயல்பட்டனா்’ என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமா் நெதன்யாகு கூறுகையில், ‘பயங்கரவாதத்துக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பதை இந்த மீட்பு நடவடிக்கை காட்டுகிறது. எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் இதே போல் மீட்போம்’ என்றாா்.இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன் 251 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அவா்களில் 105 போ் கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்கப்பட்டனா். 4 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் தாமாக முன்வந்து வெளியிட்டனா். அவ்வப்போது நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளில் 7 பிணைக் கைதிகளை இஸ்ரேல் படையினா் மீட்டனா்.இந்த நிலையில், மிகப் பெரிய மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நேரத்தில் 4 பிணைக் கைதிகள் இஸ்ரேல் படையினா் தற்போது மீட்டுள்ளனா்.இது தவிர, ஹமாஸ் பிடியில் 62 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 19 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.காஸாவின் ஷுஜய்யா பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் படையினா், 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினா் என்று தவறாக சுட்டுக் கொன்றது நினைவுகூரத்தக்கது. அவா்களில் இருவா் யூதா்களின் ஹூப்ரு மொழியில் உதவி கேட்டும் கூட அவா்களை இஸ்ரேல் படையினா் விரட்டிச் சென்று கொன்றனா்.

இது, தங்களது தாக்குதல் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று இஸ்ரேல் ராணுவம் பின்னா் கூறியது.அந்த வகையில், அக். 7-இல் கடத்திச் செல்லப்பட்ட 251 பிணைக் கைதிகளில் 66 போ் இன்னும் ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவா்களையும் அதற்கு முன்னா் பல்வேறு காலகட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலியா்களையும் சோ்த்து மொத்தம் 120 பிணைக் கைதிகள் காஸாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.