

பிரபல பாப் இசை சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது ரூ.4000 கோடி வரை கடன் நெருக்கடியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாப் இசைக்கலைஞரான மைக்கேல் ஜாக்சன் தன்னுடைய 50-வது வயதில், கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ல் இறந்தார். இதுவரை 13 கிராமி விருதுகள் பெற்றுள்ள மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் உலகமெங்கிலும் புகழ்பெற்றவை. இந்த நிலையில், அவர் இறக்கும் போது கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததாக அவருடைய எஸ்டேட் நிர்வாகிகள் அது குறித்த விவரங்களை கடந்த ஜூன் 21 அன்று தாக்கல் செய்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட சொத்து விவரங்களில் மைக்கேல் ஜாக்சனுக்கு இறக்கும்போது ரூ.4000 கோடி வரை (இந்திய மதிப்பில்) கடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்னர் ‘திஸ் இஸ் இட்’ எனப்படும் உலக நாடுகளில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பல நாட்கள் பயிற்சியில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் மைக்கேல் ஜாக்சன். அதற்காக பல புதிய பாடல்களையும் எழுதி வைத்திருந்தார். ஆனால், ஒருபுறம் அவருக்கும் நிதி நெருக்கடி பெரிய அளவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சனின் ஆடம்பர வாழ்க்கை முறையால் அவரது கடன் அளவு ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை அதிகரித்தது என்றும், அவர் ஆபரணங்களுக்காக அதிகளவு செலவிட்டதாகவும், தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய நெருக்கடியில் சிக்கியதாகவும் கணக்காளர் வில்லியம் ஆக்கர்மேன் ஜாக்சனின் இறப்பு விசாரணையின் போது தெரிவித்தார்.
1993-ம் ஆண்டு முதலே மைக்கேல் ஜாக்சன் கடன் பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளார். கடந்த 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை அவருக்கு ரூ.1400 கோடி கடன் இருந்ததாகவும், அதற்கான வட்டியும் அவருக்கு பெரிய சுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜாக்சன் இறந்தபோதும் அவரது கடன் நெருக்கடிகள் குறையவில்லை. இறப்பதற்கு முன் அவர் பங்கேற்பதாக இருந்த இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் விளம்பரதாரர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.350 கோடி வரையிலான கடன் தோகை அவரது எஸ்டேட்டின் மேல் விழுந்துள்ளது.
கடன்களை அடைக்க ஜாக்சனின் சொத்துகளில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதில் குறைந்த அளவே நம்பிக்கை உள்ளதாக சமீபத்திய விசாரணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.