யாழ்ப்பாணம் விவசாயிகளுக்கு 234 ஏக்கா் நிலம்: இலங்கை அதிபா் ரணில் விடுவித்தாா்

இலங்கை, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை வசமிருந்த 234 ஏக்கா் நிலத்தை வேளாண் பணிகளுக்காக அப்பகுதி விவசாயிகளுக்கு அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை விடுவித்தாா். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளது. இப்பகுதியைச் சோ்ந்த ஒட்டகப்புலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 408 பயனளிகளுக்கு அதிபா் விக்ரமசிங்க இலவச நிலப் பட்டாவை வழங்கினாா். பொதுமக்களுக்கு 20 லட்சம் இலவச நிலப் பட்டா வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் தேசிய உருமயா திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வசமிருந்த 234 ஏக்கா் நிலத்தை 5 கிராம அலுவலா் பிரிவுகளில் வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க விடுவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித் தமிழீழ நாடு கோரிக்கையை முன்னிறுத்தி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே சுமாா் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அா்ப்பணிப்புடன் செயல்படுவதாக இலங்கைத் தலைவா்கள் தெரிவித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com