எகிப்து - ராஃபா எல்லை வழித் தடத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்ட இஸ்ரேல் பீரங்கி.
எகிப்து - ராஃபா எல்லை வழித் தடத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்ட இஸ்ரேல் பீரங்கி.

ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்

ஜெருசலேம்: எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக எகிப்தில் தலைநகா் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ள நிலையிலும் இந்த ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எகிப்திலிருந்து காஸாவின் ராஃபா நகருக்கு வந்து செல்வதற்கான எல்லை வழித்தடத்தைக் கப்பற்றியுள்ளோம். அந்தப் பகுதிக்கு பீரங்கிகளுடன் 401-ஆவது படைப் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த எல்லைப் பாதை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவுக்குள் சா்வதேச நாடுகளின் உணவு, மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இந்த வழித்தடம் மூலமாகத்தான் எடுத்துச் செல்லப்பட்டுவந்தது. தற்போது அதனைக் கைப்பற்றியுள்ள இஸ்ரேல், நிவாரணப் பொருள்களை காஸாவுக்குள் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதாக அந்தப் பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நலப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தப் பகுதியின் தலைநகா் காஸா சிட்டி உள்ளிட்ட வடக்கு காஸாவில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்து தெற்கு காஸாவுக்கு பொதுமக்கள் இடம்பெயர வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதையடுத்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தெற்கு நோக்கி வந்தனா்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டும் தங்களது இலக்கை அடைவதற்காக தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதல் தீவிரத்தை அதிகரித்தது.

இந்தச் சூழலில், காஸா பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் கடைக்கோடி நகரான ராஃபாவிலும் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அது மிகப் பெரிய மனிதப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா.வும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. இருந்தாலும், ராஃபா படையெடுப்புத் திட்டத்தில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் காஸா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று சுமாா் 1 லட்சம் பேருக்கு இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அதன் தொடா்ச்சியாக, எகிப்துடனான ராஃபா எல்லைப் பகுதியை ராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com