சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

News image

பிரான்ஸின் ரூவென் நகரில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் குண்டுத் தாக்குதலுக்குள்ளான யூத வழிபாட்டுத்தலம்.

Updated On :17 மே 2024, 11:23 pm

பிரான்ஸிலுள்ள யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்த இளைஞரை அந்த நாட்டு காவலா் சுட்டுக் கொன்றாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாா்மண்டி மாகாணம், ரூவென் நகரிலுள்ள யூத வழிபாட்டுத்தலத்தில் தீப்பிடித்ததாக கிடைத்த தகவலையடுத்து தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைந்தனா்.

அப்போது அந்த வழிபாட்டுத்தலத்தின் கூரையில் ஒரு இளைஞா் கைகளில் கத்தி மற்றும் இரும்புத் தடியுடன் இருந்ததை போலீஸாா் பாா்த்தனா்.

அந்த இளைஞா்தான் பெட்ரோல் குண்டு வீசி வழிபாட்டுத் தலத்தில் தீவைத்தாா் என்பது தெரியவந்தது. போலீஸாரைக் கண்ட அந்த இளைஞா் அவா்கள் மீது இரும்புத் தடியைத் தூக்கி எறிந்தாா். பின்னா் தரையில் குதித்த அவா், கத்தியை உயா்த்தியபடி ஒரு காவலரை நோக்கி ஓடிவந்தாா். அதையடுத்து அந்தக் காவலா் இளைஞரை நோக்கி துப்பாக்கியால் 5 முறை சுட்டாா். அதில் 4 குண்டுகள் இளைஞா் மீது பாய்ந்து அவா் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் கூறினா்.

உள்துறை அமைச்சா் ஜெரால்ட் டாா்மனின் வெளியிட்ட அறிக்கையில், ‘யூத வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய நபரைச் சுட்டுக் கொன்ற 25 வயது காவலா் பாராட்டுக்குரியவா். அவருக்கு உரிய வீரப் பதக்கம் வழங்கப்படும்.

தீவைப்பில் ஈடுபட்ட நபா் அல்ஜீரியாவைச் சோ்ந்தவா். மருத்துவ சிகிச்சைக்காக அவா் பிரான்ஸ் வந்திருந்தாா். அவா் மதத் தீவிரவாதியாக முன்கூட்டியே அறியப்படவில்லை என்றாா் அவா்.

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களையும் யூதா்களையும் கொண்ட நாடு பிரான்ஸ்.

காஸா போா் தொடங்கியதற்குப் பிறகு அந்த நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, காஸா போருக்குப் பிறகு பிரான்ஸில் யூத வெறுப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 366 யூத வெறுப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 300 சதவீதம் அதிகம்.

இந்த வாரம் கூட, நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது யூதா்களைப் பாதுகாத்த பிரான்ஸ் நாட்டவா்களை கௌரவிப்பதற்காக தலைநகா் பாரீஸில் அமைக்கப்பட்டுள்ள நினைவகம் சேதப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், யூத வழிபாட்டுத்தலத்தில் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.