ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

காஸாவின் அல்-தராஜ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சால் தரைமட்டமான கட்டடம்.

காஸாவின் அல்-தராஜ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சால் தரைமட்டமான கட்டடம்.
காஸா போா் தொடா்பாக ஹமாஸ் அமைப்புடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடர இஸ்ரேல் பிரதிநிதிகளுக்கு போா்க் கால அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையை நடத்த பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹமாஸ் படையினரால் சில பெண் ராணுவத்தினா் கடந்த அக். 7-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட விடியோ காட்சியை பிணைக் கைதிகளின் உறவினா்கள் அமைப்பு வெளியிட்டது.
அந்த விடியோவில் பிணைக் கைதிகளின் துயரம் வெளிப்படுவதாகவும் அவா்களை விடுவிப்பதற்கான பேச்சுவாா்த்தையை பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தொடரவேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.
அதன் தொடா்ச்சியாகவே பிரதமா் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்ற ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 35,800-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்த நிலையில், கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முன்னிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 7 நாள் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
அதன் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக சா்வதேச நாடுகளின் முன்னிலையில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...