மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் இன்று பதவியேற்பு!

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷேன்பாம் இன்று பதவியேற்பு
மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் இன்று பதவியேற்பு!
AP
Published on
Updated on
1 min read

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி(இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷேன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்சிகோவின் அதிபராக கிளாடியா ஷேன்பாம் தொடருவார்.

ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில்(உலகின் 2-ஆவது பெரிய ரோமன் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு), யூத இனத்தை சேர்ந்த ஒருவர், அந்நாட்டின் உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டில் பெண்கள் பாரம்பரியக் கடமைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்படும் சூழலிலும் நாட்டின் தலைமைப் பதவியை ஒரு பெண் அலங்கரிக்கவுள்ளாா்.

உலகளவில் புகழ்பெற்ற பருவநிலை விஞ்ஞானியான கிளாடியா ஷேன்பாம், 2007-ஆம் ஆண்டு ’அமைதிக்கான நோபல் பரிசை’ வென்ற பெருமைக்குரியவர். 2018-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். கடந்த 2000-லிருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இவா் பொறுப்பு வகித்துள்ளாா்.

மெக்சிகோ மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா ஆகிய வல்லரசுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இதுவரை வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர் உடன் புதிய அதிபர் கிளாடியா ஷேன்பாம்
அதிபர் ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர் உடன் புதிய அதிபர் கிளாடியா ஷேன்பாம்AP

குற்றச்செயல்களும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக இன்று(அக். 1) பதவியேற்கிறார் கிளாடியா ஷேன்பாம். பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் குடிமைப் பெண்மணி அந்தஸ்திலுள்ள ஜில் பைடன் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாகியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com