பாங்காக்: தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
பேருந்தில் திடீரென பயங்கர தீ பரவிய நிலையில், அதிலிருந்த 25 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மத்திய உத்தை தானியிலிருந்து பாங்காக் நோக்கி பள்ளிப் பேருந்து சுற்றுலா சென்று கொண்டிருந்ததாகவும், இதில் 44 பேர் இருந்ததாகவும், பதும் தானே மாகாணத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீ பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் இறந்திருக்கக் கூடும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 25 மாணவர்கள் வரை இறந்திருக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
சம்பவ இடத்திலிருந்து மீட்புப் பணிகளை பல துறை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகிறார்கள். பேருந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியும் விடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.
பேருந்தில் பயணித்த மாணவர்களின் வயது மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
பேருந்தின் டயர் வெடித்ததில், தீ விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், அந்த பேருந்திலிருந்து குறைந்தது 10 பேரின் உடல்களை மீட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.