இஸ்ரேலின் மிகப் பெரிய விமானத் தளத்தை அழித்த ஈரான்!

இஸ்ரேலின் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டது பற்றி...
Iran
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்PTI
Published on
Updated on
2 min read

இஸ்ரேலின் மிகப் பெரிய நெவடிம் விமானத் தளத்தை ஏவுகணைத் தாக்குதலில் அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக ஈரான் பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பழிதீர்த்த ஈரான்!

காஸா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜூலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனீயேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் படை கொன்றது.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை ஈரான் தாக்கியது. மேலும், இந்த தாக்குதல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் நடவடிக்கை என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலில் காயமடைந்தவர்களை மீட்கும் காவலர்கள்
இஸ்ரேலில் காயமடைந்தவர்களை மீட்கும் காவலர்கள்PTI

ஈரான் அதிபர் எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்ட ஈரான் அதிபர் மசூத் பிசிஷ்கியான், ஈரானின் வலிமை குறித்த முன்னோட்டம்தான் இது, ஈரானுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பிற நாடுகள் போருக்குள் நுழைந்தால், அடுத்த கட்டத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களை குறிவைத்து தாக்குதல்

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஈரான் ஆயுதப் படைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி வெளியிட்ட அறிக்கையில், மூன்று இடங்களை குறிவைத்து ’ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ் - 2’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“பல்வேறு தாக்குதலை திட்டமிட்டு நடத்தும் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைமையகம், அமெரிக்காவின் எஃப் 35 மற்றும் எஃப் 15 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நெவடிம் விமானத் தளம் மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஹட்செரிம் விமானத் தளம் ஆகியவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில், தாக்குதலுக்கு உள்ளான நெவடிம் விமானத் தளமானது, 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நான்கு ஓடுபாதைகளை கொண்ட மிகப் பெரிய விமானத் தளமாகும்.

இங்கு அமெரிக்கா தயாரிப்பான எஃப் 35 ஸ்டெல்த் அதிநவீன போர் விமானங்கள், சி-130 போக்குவரத்து விமானங்கள், போயிங் 707 டேங்கர் விமானங்கள், உளவு விமானங்களுடன் மூன்று படைப் பிரிவுகளுடன் செயல்படுகிறது.

இந்த நிலையில், நெவடிம் தளத்தை 20 முதல் 30 பலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் பெருமளவு சேதமடைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏவுகணை வழிமறித்து தாக்குதல் இஸ்ரேல் படை
ஏவுகணை வழிமறித்து தாக்குதல் இஸ்ரேல் படைPTI

90 சதவிகிதம் வெற்றி

இஸ்ரேல் மீது செலுத்தப்பட்ட ஏவுகணைகள் 90 சதவிகிதம் வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்ததாக ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபத்தா-1 என்ற ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் பயன்படுத்தியதாகவும், இதனை வழிமறித்து தாக்குவது மிகுந்த சவாலானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - இஸ்ரேல் ஆலோசனை

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தோல்வி அடைந்ததாக தெரிவித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறையுடன் அமெரிக்க ராணுவத்தினர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளவில் மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.