மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!

இஸ்ரேல் போரில் வெற்றி பெறுவதற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவையில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Published on
Updated on
2 min read

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று காணொளி வாயிலாக பேசிய இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, ”ஈரானின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில், நாகரிகமடைந்த நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கவேண்டும். தற்போது பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்குமாறு கூறுகின்றனர். இது அவர்களுக்கு அவமானம்” என்று கூறினார்.

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூதிக்கள், ஈராக் மற்றும் சிரியாவில் ஷியாக்கள், மேற்கத்திய பயங்கரவாதிகள் போன்ற பலமுனைத் தாக்குதல்களால் இஸ்ரேல் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவது பெரிய பாசங்குத்தனம் என்றார்.

மேலும், ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

”பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகள் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால், அதனை எதிர்ப்பதாகச் சொல்பவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை விதிக்கின்றனர். என்ன ஒரு அவமானம்.

இஸ்ரேல் இந்த போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவிலோ அல்லது ஆதரவில்லாமலோ ஜெயிக்கலாம். ஆனால், அவர்களின் அவமானம் இந்தப் போரின் வெற்றிக்குப் பின்னரும் தொடரும்” என்று இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தன்னுடைய பேச்சுக்கு எதிராக இஸ்ரேல் அதிபர் இவ்வாறு பேசியது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், “நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இது இஸ்ரேலின் பாதுகாப்பு உள்பட இது ஒரு தவறான புரிதலாகும். போர் எப்போதும் வெறுப்பையே வளர்க்கும். லெபனான் மற்றொரு காஸாவாக மாறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் பேச்சு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பிரான்ஸ் அரசு, இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடாக பிரான்ஸ் இருப்பதாகவும், நெதன்யாகு தனது தீவிரமான கருத்தால் இரு நாடுகளின் நட்பு முறிவு குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு கத்தார், ஜோர்டான் நாட்டு அரசுகள் முக்கியமான முன்னெடுப்பாக வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.