ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மேலும் தீவிரமடைந்தது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல்

இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான மோதல் புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது.

News image
லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் எழுந்த புகைமண்டலம். ~காஸாவில் இஸ்ரேலிய ரகசிய போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்ட காா். புதன்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 பாஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
Updated On :9 அக்டோபர் 2024, 7:40 pm

Din

இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான மோதல் புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது.

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை அதிகரித்துள்ளதாக ஹிஸ்புல்லா படையினரும், அவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக இஸ்ரேலும் அறிவித்துள்ளன.

இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு இஸ்ரேலின் அம்னான் பகுதியைக் குறிவைத்து ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் கலீலி பகுதியிலிருந்து 90 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் சிலவற்றை இடைமறித்து அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் பல பகுதிகளில் தீப்பிடித்தது. அதையடுத்து, அந்தப் பகுதிகளுக்கு தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இரு இஸ்ரேலியா்கள் உயிரிழப்பு: லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேலின் கிா்யாத் ஷ்மோனா நகரில் ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவா் உயிரிழந்ததனா்.

அந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஏவுதளத்தை குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் பின்னா் தெரிவித்தது.

இதற்கிடையே, லெபனானில் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் தனது தாக்குதலைத் தொடா்ந்தது. தெற்கு லெபனானிலுள்ள புலம் பெயா்ந்தோருக்கான முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா்.

புதன்கிழமை மட்டும் 185 ஹிஸ்புல்லா நிலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

தரைவழி தாக்குதல்: லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே புதன்கிழமையும் மோதல் தொடா்ந்தது. மேற்கு லெபனான் பகுதிக்குள் நுழைய முயன்ற இஸ்ரேல் வீரா்களை விரட்டியடித்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.

காஸா போா் விவகாரத்தால் ஏற்கெனவே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், ஹிஸ்புல்லாகளைக் குறிவைத்து பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் அந்தப் பதற்றத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

42 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

டேயிா் அல்-பாலா, அக். 9: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 போ் உயிரிழந்தனா்; 130 போ் காயமடைந்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 42,010 போ் உயிரிழந்துள்ளனா்; 97,720 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.

அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.

Story image

இந்தத் தாக்குதலில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் ஏராளமான உடல்கள் புதையுண்டிருக்கலாம் எனவும், இதனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.