டிரம்புக்கு எதிரான சதியை நிறுத்தவும்! ஈரானுக்கு பைடன் எச்சரிக்கை

ஈரானின் சதிச் செயலுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றி...
ஜோ பைடன்(கோப்புப்படம்)
ஜோ பைடன்(கோப்புப்படம்)AP
Published on
Updated on
1 min read

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான சதிச் செயல்களை உடனடியாக ஈரான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரை கொலை செய்யும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் திங்கள்கிழமை(உள்ளூர் நேரப்படி) தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள டிரம்பை கொல்ல மூன்று முறை முயற்சி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“அமெரிக்கர்களுக்கு எதிரான ஈரானின் சதித் திட்டங்களுக்கு தீர்வு காணுமாறு பைடன் தனது குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். பைடனின் அறிவுறுத்தலின் பேரில், டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிரான சதித் திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானின் உயர்நிலை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிரம்பை கொலை செய்யும் எந்தவொரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. மேலும், 1953ஆம் ஆண்டு ஈரான் ஆட்சி கவிழ்ப்பு முதல் 2020ஆம் ஆண்டு ராணுவத் தளபதி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதை மேற்கோள்காட்டி, பல ஆண்டுகளாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்காதான் தலையிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவுடனான மறைமுக பேச்சுவார்த்தையையும் நிறுத்திக் கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிராக ஈரானின் ராணுவத் தளபதி சுலைமானி சதித் திட்டம் தீட்டி இருப்பதாக கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து, அவரை வான்வழித் தாக்குதல் மூலம் கொல்வதற்கு அப்போதைய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப். 24-ஆம் தேதி ஈரானின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் டிரம்புக்கு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், டிரம்புக்கு எதிரான ஈரானின் அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனைத் தாக்கினாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com