கூன் போடுவது மூளையைக் கொல்லும்.. பிரையன் ஜான்சன் பகிர்ந்த உண்மைச் சம்பவம்

கூன் போடுவது மூளையைக் கொல்லும் என்று பிரையன் ஜான்சன் பகிர்ந்த அனுபவம்.
பிரையன் ஜான்சன்
பிரையன் ஜான்சன்
Published on
Updated on
2 min read

மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரையன் ஜான்சன் (46), கூன் போடுவதைத் தவிர்த்து, தனது உடல் அமைப்பை மாற்றியதன் மூலம், தான் சந்திக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பியதன் உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், அவர் தனது புகைப்படத்துடன் தான் சந்தித்த அனுபவத்தை, மக்களின் நலனுக்காகப் பகிர்ந்துள்ளது, பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனது உடல் அமைப்பை, ஐந்து முக்கிய நடவடிக்கைகள் மூலம் மாற்றியதாகவும், ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகத்தான் எனது உடல் அமைப்பு எவ்வாறு என்னையே கொன்றுகொண்டிருந்தது என்பதை தான் உணர்ந்தபோது கடும் அதிர்ச்சியடைந்ததாகவும் நான் அமர்ந்திருக்கும் அமைப்பினால், எனது மூளை கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.

தான் கூன் போட்டு அமர்ந்துகொண்டிருப்பதால், இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருந்ததையும், இதனால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, நான் பக்கவாதம் அல்லது சாவை எதிர்கொண்டிருக்கலாம். தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். என்னைப் போலவே பலரும், இதுபோன்று கூன் போட்டு அமர்வதால், அவர்களது உயிருக்கே உலைவைத்துக் கொள்ளலாம். அது பற்றிய விழிப்புணர்வுக்காகத்தான் இதைப் பகிர்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

முதலில், நான் அமரும் முறை மோசமாக இருந்தது. நாள் முழுக்க ஒரு நாற்காலியில் அமர்ந்து, தலையை குனிந்துகொண்டு கணினியையே பார்த்துக்கொண்டிருப்பேன். பொதுவாக இப்படி அமர்வதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியாது, தசை மற்றும் எலும்பு வலி, ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, ஜீரண பாதிப்பு, நுரையீரல் செயல்படுவதில் பிரச்னை, நரம்புகளில் அழுத்தம், முதுகெலும்பின் வடிவம் மாறுவது, மன அனுத்தம், மயக்கம், மனநிலை தடுமாற்றம், உற்சாகமின்மை, உறக்கத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ஐந்து முறைகளை பின்பற்றி இந்த பிரச்னையிலிருந்து வெளிவந்ததாக கூறும் அவர் அதனை விவரித்துள்ளார்.

முதலில், தான் மனதுக்குத்தான் பயிற்சி அளித்தேன். அடிக்கடி என் மனம், நான் ஒழுங்காக அமர்ந்திருக்கிறேன், கூன் போடாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறேன் என்பதை கவனித்து சொல்லிக்கொண்டேயிருக்கும்படி செய்தேன்.

இரண்டாவது, செல்போன் மற்றும் கணினியை கழுத்துக்கு நேராக வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவுப்படுத்தும். எப்போதும் நாம் கையில் செல்போனை வைத்துக்கொண்டு தலையை கவிழ்த்துப் பார்த்துக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

நாள் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கூட, அடிக்கடி எழுந்து நின்று பிறகு உட்கார்ந்து வேலை செய்யலாம். இதனால், உடலின் அமைப்பில் ஏற்படும் ஒரு சிக்கல் குறைகிறது என்கிறார். இல்லை வசதி இருக்கிறது என்றால், எழுந்து நடந்துசென்றுவிட்டு அல்லது ஒரு சில மாடிப்படிகளை ஏறிவிட்டு வரலாம். மீண்டும் வந்து நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.

அடுத்து, நிற்கும்போது உயரமாக இருப்பவர்கள் சற்று தளர்வாக நிற்கிறோம். அவ்வாறு செய்யாமல், நன்கு உயரமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கவேண்டும். அவ்வாறு நான் நிற்கப் பயிற்சி எடுத்தேன். இதனால், ஒரு பக்கம் எனது தன்னம்பிக்கையும் வளர்ந்தது என்கிறார்.

உங்கள் உடல் அமைப்பை மாற்றுவது உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்து உங்களைப் போல இருக்க வைக்கும். அவர்களுக்கும் உடல்நலன் சரியாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிலிக்கான் வேலியின் நிர்வாகியாக இருந்த பிரையன் ஜான்சன், வயதான தோற்றத்திலிருந்து திரும்பி இளமையை அடைந்தவர் என்ற பெயருக்குச் சொந்தக்காரர். பல லட்ச ரூபாய்களை செலவிட்டு, மருத்துவம் மற்றும் சிகிச்சைகள் மட்டுமல்லாமல், வாழ்முறையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மூலம், இளமையை மீண்டும் அடைவதை சாத்தியமாக்கும் பயிற்சியிலும் இறங்கியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்புதான், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், வழுக்கையை எவ்வாறு சரி செய்தார், தலைமுடி நரைத்ததை எப்படி மீட்டெடுத்தார் என்பது குறித்து பதிவிட்டிருந்தார். இந்த சிகிச்சைகளுக்கு முன்பு, அவர் தனது உடலில் இருந்த மொத்த பிளாஸ்மாக்களையும் மாற்றிக்கொள்ளும் சிகிச்சைக்கு உள்படுத்திக்கொண்டதாகவும், இதனால் அவரது உடலில் இருந்து மொத்த நச்சுவும் வெளியேறியதாகவும் கூறி பரபரப்பைக் கூட்டியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com