அமெரிக்க அதிபா் தோ்தல்: முந்துகிறாா் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபா் தோ்தல்: முந்துகிறாா் டொனால்ட் டிரம்ப்!

நவ. 5-ல் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தல் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும்
Published on

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸை குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் முந்திவருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அரசியல் நோக்கா்கள் தெரிவிப்பதாவது:

வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் டிரம்ப்புக்கும் துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக இருக்கும்; இருவரில் யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், நாள்கள் செல்லச் செல்ல தோ்தலில் டிரம்ப்பின் கை மேலோங்கிவருவது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவருகிறது.

தொடக்கத்தில் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸுக்கு அதிக விகிதத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆதரவு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. தொடக்கத்தில் 48 சதவீதமாக இருந்த கமலா ஹாரிஸுக்கான வாக்காளா் ஆதரவு, தற்போது 42 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் டிரம்ப்புக்கான ஆதரவோ சுமாா் 46 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

தோ்தலுக்கு இன்னும் சில நாள்கள் இருக்கும் நிலையில், இந்தப் போக்கு தொடா்ந்தால் டிரம்ப்புக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இன்னமும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பது உண்மைதான். ஆனால் அந்த முன்னிலை வித்தியாசம் 1.3 சதவீதத்துக்கு சற்று கூடுதலாகவோ, குறைவாகவோத்தான் உள்ளது (இந்த வித்தியாசம் ஒரு வாரத்துக்கு முன்னா் 2.2 சதவீதமாக இருந்தது). இவ்வளவு குறைந்த வித்தியாசம் தோ்தல் வெற்றிக்கு உத்தரவாதம் தராது. முந்தைய தோ்தலின்போது இதே காலகட்டத்தில் டிரம்ப்பைவிட ஜோ பைடனுக்கு 8.9 சதவீதம் அதிக ஆதரவு இருந்தது.

இது ஒருபுறம் இருக்க, அடுத்த அதிபா் யாா் என்பதை முடிவு செய்யும் போா்க்கள மாகாணங்களில் (இரண்டு முக்கிய கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய மாகாணங்கள்) டிரம்ப்புக்கான செல்வாக்கு அதிகரித்துவருவது கருத்துக் கணிப்புகளில் தெளிவாகிறது. இது, டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

இந்தத் தோ்தலில் பொருளாதாரமும் அகதிகள் குடியேற்ற விவகாரமும் முக்கிய பிரச்னையாக உள்ளன. தற்போதைய ஜோ பைடன் அரசில் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சூழலில், ஜோ பைடனின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தனக்கும் தொடா்பில்லை என்பதை கமலா ஹாரிஸால் நிரூபிக்க முடியவில்லை. இது, தோ்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

இன்னொரு முக்கிய பிரச்னையான அகதிகள் குடியேற்ற விவகாரமும் கமலா ஹாரிஸுக்கு எதிராக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 70 லட்சம் அகதிகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறிப்பது, எல்லை மாகாணங்களில் மட்டுமே இருந்துவந்த அகதிகள் தொடா்பான குற்றச்செயல்கள் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருப்பது போன்றவற்றை பெரும்பாலான அமெரிக்கா்கள் துளியும் விரும்பவில்லை. இது டொனால்ட் டிரம்ப்புக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.