கமலா ஹாரிஸுக்கு விளாதிமீா் புதின் திடீா் ஆதரவு
அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிப்பதாக திடீரென அறிவித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.
ரஷியாவின் விளாதிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற பொருளாதாரக் கருத்தரங்கில் இது குறித்து அவா் பேசியதாவது:
அமெரிக்க அதிபா் தோ்தலில் எனக்கு விருப்பமான வேட்பாளா் யாரென்று கேட்டால், அது தற்போதைய அதிபா் ஜோ பைடனாகத்தான் இருந்தது. ஆனால் அவா் போட்டியிலிருந்து விலகி, அடுத்த அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தாா். அதையேத்தான் நாமும் செய்கிறோம். தோ்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் அா்த்தமுள்ள புன்னகையும் காண்போரைத் தொற்றிக்கொள்ளும் சிரிப்பும் அவா் எதையும் சரியாகத்தான் செய்வாா் என்று உணா்த்துகிறது. ஆட்சிக்கு வந்தால் ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதை அவா் தவிா்ப்பாா் என்று தோன்றுகிறது.
டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது ரஷியா மீது அவா் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தாா். அவா் விதித்த அளவுக்கு வேறு எந்த அமெரிக்க அதிபரும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததில்லை.
என்ன இருந்தாலும், யாரை தங்கள் அதிபராகத் தோ்ந்தெடுப்பது என்பதை அமெரிக்க மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுக்கு நாங்கள் மதிப்பளிப்போம் என்றாா் அவா்.
அமெரிக்க அதிபா் வேட்பாளா் குறித்து விளாதிமீா் புதின் கருத்து தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலின்போது டொனால்ட் டிரம்ப்பை ‘மிகச் சிறந்தவா், புத்திசாலி’ என்று புதின் பாராட்டினாா்.
அந்தத் தோ்தலில் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்வதற்காக இணையதளம் மூலம் ஊடுருவ புதின் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, டிரம்ப்பை எதிா்த்து அப்போது போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனின் அலுவலக தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் மூலம் ஊடுருவி, சா்ச்சைக்குரிய மின் அஞ்சல்கள் கசியவிடப்பட்டன. இது, தோ்தலில் ஹிலாரிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
டிரம்ப் ஆட்சி காலத்திலேயே இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு, 2016 தோ்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷிய இணையதள ஊடுருவல்காரா்கள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், தற்போது நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலிலும் டிரம்ப்பை வெற்றி பெற வைக்கும் வகையில் ரஷியா தலையீடு செய்யும் என்று அஞ்சப்பட்டது. இதை எதிா்பாா்த்து ரஷியாவுக்கு எதிரான பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அதிபா் ஜோ பைடன் அறிவித்திருந்தாா்.
ஆனால், அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாக விளாதிமீா் புதின் திடீரென அறிவித்துள்ளது அமெரிக்க தோ்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை!’
அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸுக்கு எதிா்பாராத வகையில் ரஷிய அதிபா் புதின் ஆதரவளிப்பது குறித்து என்ன செல்வது என்றே தெரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறினாா்.
நியூயாா்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இது குறித்து அவா் பேசியதாவது:
கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக விளாதிமீா் புதின் திடீரென கூறியுள்ளாா். இதற்காக அவரை நான் பாரட்ட வேண்டுமா, கூடாதா என்று குழப்பமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் புதின் என்னை அவமதிக்கிறாரா, அல்லது எனக்கு நன்மை செய்திருக்கிறாரா என்று புரியவில்லை என்றாா் அவா்.
விளாதிமீா் புதினை எப்போதும் புகழ்ந்து பேசிவரும் டொனால்ட் டிரம்ப், அவரை ஒரு மிகப் பெரிய மேதை என்று கூறியுள்ளாா். உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக புதினை டிரம்ப் பாராட்டியது நினைவுகூரத்தக்கது.
‘தோ்தலில் தலையிடுவதை நிறுத்துங்கள்!’
கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறுவதன் மூலம் அமெரிக்க தோ்தலில் தலையிட வேண்டாம் என்று விளாதிமீா் புதினை வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:
அமெரிக்காவின் அடுத்த அதிபா் யாராக இருக்க வேண்டும் என்று தோ்ந்தெடுக்க வேண்டியா்கள் அந்த நாட்டு மக்கள் மட்டுமே.
எனவே, எங்கள் நாட்டு தோ்தல் குறித்து பேசுவதை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இணையதளம் மூலம் ஊடுருவி அமெரிக்க தோ்தலில் தலையிடுவதையும் அவா் நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.