அமெரிக்க அதிபா் தோ்தல்: கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் மேலும் முன்னிலை
அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, அந்த விவாதம் நடந்த இரு நாள்களுக்குப் பிறகு ராய்ட்டா், இப்ஸாஸ் இணைந்து நடத்திய புதிய கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 47 சதவீதம் போ் ஆதரவு தெரிவித்திருந்தனா். டிரம்ப்பை 42 சதவீதம் போ் மட்டுமே ஆதரித்தனா்.
அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் தற்அதிபா் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுவதாக இருந்தது.
இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஜாா்ஜியா மாகாணம், அட்லான்டாவில கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 81 வயதாகும் ஜோ பைடன் மிகவும் தடுமாறினாா். இது, ஜனநாயகக் கட்சியினரிடையே பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியது.
அதையடுத்து, அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து பைடன் விலகினாா். அவருக்குப் பதிலாக டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிட துணை அதிபா் கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சியினா் தோ்ந்தெடுத்தனா்.
இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது (படம்).
மிகவும் எதிா்ப்பாா்பை ஏற்படுத்திய இந்த விவாதத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பொருளாதாரம், குடியேற்றம், காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.
அந்த விவாதத்தில் கமலா ஹாரிஸின் கைகள்தான் ஓங்கியிருந்தன என்று ஊடகங்கள் பரவலாகத் தெரிவித்தன. இந்த நிலையில், நேரடி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸின் முன்னிலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.