இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுரகுமார திஸ்ஸநாயக (56) வெற்றி பெற்று, அந்நாட்டின் 9-ஆவது அதிபராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அநுரகுமாரவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவில், ஜனநாயக சமதர்ம குடியரசு நாடான இலங்கையின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக அவர்களுக்கு எனது பாராட்டுகளும் மனமார்ந்த வாழ்த்துகளும்.
நமது இரு நாடுகளும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இணைந்து செயல்படட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அநுரகுமார வெற்றி பெற்றார். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.
இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அநுரகுமார திசாநாயக 1,05,264 வாக்குகளும், சஜித் பிரேமதாச 1,67,867 வாக்குகளும் கூடுதலாகப் பெற்றிருந்தனர்.
முதல் அதிபர்
இலங்கையில், ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) என்பது மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அந்தக் கட்சியின் தலைவரான அநுர குமார திசாநாயக அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதன் மூலம், இலங்கையின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அதிபா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
இலங்கையின், அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியைச் சோ்ந்த அநுர குமார திஸ்ஸநாயக, கொழும்பில் உள்ள களனிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றவர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னணி வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்த நிலையில் தற்போது அதிபராகியிருக்கிறார்.