மாா்ஜயுன்: லெபனானில் இஸ்ரேல் திங்கள்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 450ஐ தாண்டியிருக்கும் நிலையில், மக்களின் வீடுகளில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய குடியிருப்புப் பகுதிகளில், ஒவ்வொரு வீட்டின் படுக்கையறை உள்ளிட்டஅறைகளில், ஆயுதங்கள் இருப்பதற்கான எக்ஸ்ரே புகைப்படத்தையும், வீடுகளுக்குள் ஆயுதங்கள் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று நடத்தப்பட்ட தாக்குதலின்போது தெற்கு லெபனானில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கருதிய இஸ்ரேல், அந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறுமாறு அரபு மொழியில் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்ததாக லெபனான் ஊடகம் தெரிவித்தது. சுமாா் ஓராண்டாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் இடையே நடைபெற்று வரும் மோதல் அதிகரித்துள்ள நிலையில், இதுபோல பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருப்பது அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கிவைத்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், லெபனானில். சுமாா் 300 இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேல் வீசிய சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்தன. இந்த நிலையில்தான், மக்களின் வீடுகளுக்குள் மிகப்பெரிய ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான புகைப்படத்தை இஸ்ரேல் வெளியிட்டு அச்சத்தை அதிகரித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே நேற்று நடத்தியதுதான் கடுமையான தாக்குதலாகும். ஏராளமான பெண்கள், குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியானதற்கு, உலக நாடுகள் கவலை தெரிவித்திருக்கும் நிலையில், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது ஏன் என்பதை விளக்கும் வகையில், இஸ்ரேல் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பது, மேலும் தாக்குதல் தீவிரமடையுமோ என்ற அச்சத்தையே மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
காஸா பகுதியில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டதே இந்த பதிலடிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் ஒருபக்கம், லெபனான் மீது இஸ்ரேல் மறுபக்கம் என தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த வாரம் லெபனானில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.