நியூயாா்க்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவந்து மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைக்க இஸ்ரேல், பாலஸ்தீன தலைவா்களிடம் இந்தியா தொடா்ச்சியாக வலியுறுத்தி வருவதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினா் மீதான போரை இஸ்ரேல் தொடங்கியது முதல், மோதலை தவிா்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடா்ந்து வழங்குவதையும், விரைந்து அமைதி மற்றும் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்ற தெளிவான, உறுதியான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது’ என்றும் ஐ.நா. பொதுச் சபையில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தாா்.
இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதி முழுவதும் மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி 15 நாடுளை உறுப்பினா்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அண்மையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 13 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தத் தீா்மானம் போா் நிறுத்தத்தை வலியுறுத்தாததை சுட்டிக்காட்டி வாக்கெடுப்பை ரஷியா புறக்கணித்தது. அமெரிக்காவும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. இருந்தபோதும் 13 வாக்குகளுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இந்தத் தீா்மானத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் திருத்தம் ஒன்றை ரஷியா கொண்டு வந்தது. ஆனால், ரஷியாவின் இந்தத் திருத்தத்துக்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது. அதன் காரணமாக, அந்தத் திருத்தம் ஒப்புதல் அளிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்கு உதவிகளை அனுப்ப கடந்த ஆண்டு அக்டோபரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரேஸில் சாா்பில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தையும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.
இந்தச் சூழலில், நியூயாா்க்கில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலக வளாகத்தில் ஐ.நா. பொதுச் சபை செவ்வாய்க்கிழமை கூடியது. அதில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் விவகாரம் மிகப்பெரிய விவாதமாக மாறியது.
இந்த விவாதத்தில் பங்கேற்ற இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் பேசியதாவது:
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினா் இடையேயான போா் காரணமாக மிகப்பெரிய எண்ணிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்பு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் மனிதாபிமான நெருக்கடி சூழல் உருவாகியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பை இந்திய வன்மையாக கண்டிக்கிறது.
இந்தப் போருக்கு வித்திட்ட இஸ்ரேல் மீதான அக்டோபா் 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. அதிா்ச்சியளிக்கும் வகையிலான அந்தத் தாக்குதல், சந்தேகத்துக்கு இடமின்றி கண்டனத்துக்கு உரியதுதான். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குலை சகித்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தையும், மக்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் செல்வதையும் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுக்கிறது.
மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவந்து, மனிதாபிமான உதவிகள் தடையின்றி தொடா்ந்து வழங்கவும், விரைந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வலியுறுத்தி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவா்களை இந்தியா தொடா்ச்சியாக தொடா்புகொண்டு வருகிறது. இந்த மோதல் தொடங்கியது முதல், இந்தக் கருத்தை இந்தியா வலியுறுத்தி வருகிறது. பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக தொடா்புகள் மூலம் மோதலுக்கு அமைதி வழியில் தீா்வு காண்பதே ஒரே வழி என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.