
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், டெல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஆதரிக்கவும், விலை உயர்வு குறித்து அமெரிக்க நுகர்வோரின் அச்சத்தைப் போக்கவும் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன், ஹார்டு-டிரைவ்கள், செமி கண்டெக்டர்கள், சிப் தயாரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு விலக்கு அளித்துள்ளார்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை இது தொடர்பான அறிவிப்பை நேற்று(ஏப். 12) வெளியிட்டது.
தொழில்துறை மதிப்பீடுகளின்படி, நுகர்வோர் மின்னணு சாதங்களின் உலகளாவிய உற்பத்தியில் சீனா 70%-க்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் வரி விலக்கு சலுகை தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் உள்நாட்டை வாக்காளர்களைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாக கொண்டிருந்தாலும், பெய்ஜிங் உடனான கட்டண மோதலில் இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பெரும்பலான மின்னணு சாதனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை, இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளதால் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்தியா உள்பட 25 நாடுகள் மீது கடந்த 3-ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 26 சதவீத வரியை அறிவித்தார். சீன பொருள்கள் மீது 34 சதவீத வரியை அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பை சீனா அறிவித்தது.
இதனால், சீன பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா மீண்டும் உயா்த்தியது. அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் தற்போது விதித்துள்ளன.
இதன் காரணமாக, உலக அளவில் வா்த்தகப் போர் உருவாகும் நிலை எழுந்ததுடன், சா்வதேச பங்குச் சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்தச் சூழலில், சீனாவைத் தவிர, மற்ற நாடுகள் மீது விதித்த பரஸ்பர வரியை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும்; அதே நேரம், அனைத்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்