
ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவும் இறக்குமதி செய்வதாக இந்தியா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகின்றது.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி வர்த்தகத்தை நிறுத்தாததால் இந்தியாவின் பொருளுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் கணிசமாக வரி உயர்த்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியாவை தொடா்ந்து குறிவைத்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டிக்கும் நாடுகளே ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. அணுஆயுத தொழிற்சாலைக்காக யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைட், மின்வாகன உற்பத்திக்காக பல்லேடியம் ஆகியவற்றை ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது.” என்று இந்திய வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு எழுப்பியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது, இதுகுறித்து சரிபார்க்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நான் இதுவரை எவ்வளவு சதவிகிதம் வரி என்பதை சொல்லவில்லை. ஆனால், பெரிதளவு விதிக்கப்படும். விரைவில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். நாளை ரஷியாவுடன் ஆலோசிக்கவுள்ளோம், என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.