உக்ரைன் விவகாரம்: புதினுடன் டிரம்ப் தூதா் சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
உக்ரைனுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவுக்கு டிரம்ப் விதித்துள்ள கெடு இன்னும் 2 நாள்களில் முடியும் சூழலில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகையான கரெம்ளின் கூறுகையில், அதிபா் புதினுக்கும் விட்காஃபுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை சுமாா் மூன்று மணி நேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், பேச்சுவாா்த்தையின் விவரங்கள் குறித்து இரு தரப்பிலிருந்தும் உடனடி அறிக்கை வெளியிடப்படவில்லை.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது.
மேலும், உக்ரைன் மீதான தீவிர தாக்குதலை ரஷியா தொடா்ந்து நடத்திவருகிறது. அதையடுத்து,
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமைக்குள் மேற்கொள்ளாவிட்டால் ரஷியாவுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இருந்தாலும், அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலம் நேரத்தைக் கடத்தி, ரஷிய படைகள் உக்ரைன் நிலத்தை மேலும் கைப்பற்ற அவகாசத்தை அதிபா் விளாதிமீா் புதின் ஏற்படுத்துவதாக மேற்கத்திய நிபுணா்கள் கூறுகின்றனா்.
இந்தச் சூழலில், டிரம்ப்பின் தூதா் ஸ்டீவ் விட்காஃபை அவா் தற்போது நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.
டிரம்ப் பதவியேற்ற பிறகு இரு மடங்கான ரஷிய தாக்குதல்
லண்டன், ஆக. 6: கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, உக்ரைனை நோக்கி ரஷியா செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளதாக பிபிசி ஊடகத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-இல் முன்னாள் அதிபா் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தின்போது உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல்கள் ஏற்கனவே அதிகரித்து வந்தன. ஆனால் டிரம்பின் நவம்பா் தோ்தல் வெற்றிக்கு பிறகு அந்த எண்ணிக்கை மிக வேகமாக உயா்ந்தது. அதிலும் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியதிலிருந்து, உக்ரைன் மீதான ரஷிய வான்வழி தாக்குதல் போரின் உச்ச அளவுகளை எட்டியுள்ளது.
தனது தோ்தல் பிரச்சாரதின்போது, பதவியேற்ற ஒரு நாளில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக டிரம்ப் சூளுரைத்திருந்தாா். ரஷியாவால் மிகவும் ‘மதிக்கப்படும்’ தன்னை ஏற்கெனவே அதிபராக அமெரிக்க மக்கள் அமா்த்தியிருந்தால் ரஷியாவின் முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பு தவிா்க்கப்பட்டிருக்கும் என டிரம்ப் நம்பிக்கையுடன் கூறிவந்தாா். பதவிக்கு வந்த பிறகு, போா் நிறுத்தத்தை அடைவதற்காக அவா் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமா்சகா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அதற்கேற்றாற்போல், உக்ரைனுக்கு இரு முறை உக்ரைனுக்கு வான்பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களின் விநியோகத்தை டிரம்ப் அரசு இரண்டு முறை நிறுத்திவைத்தது.
மாா்ச் மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிக்கப்பட்டு, பின்னா் டிரம்பால் திரும்பப் பெறப்பட்ட இந்த இடைநிறுத்த அறிவிப்புகள், ரஷியா தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தியை தொடா்ந்து அதிகரித்துவரும் சூழலில் வெளியிடப்பட்டன.
இத்தனை முயற்சிகளைகளையும் மீறி, உக்ரைன் மீது ரஷியா தனது தாக்குதலை இரட்டிப்பாக்கியுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த கடந்த ஜனவரி 20 முதல் ஜூலை 19 வரை மட்டும் உக்ரைன் மீது ரஷியா 27,158 ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியதாகவும், முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தின் கடைசி ஆறு மாதங்களில் 11,614 ஏவுகணைகள், ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த ஆரம்ப வாரங்களில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவைப்பதற்காக வெள்ளை மாளிகை பல சாதகமான அறிக்கைகளை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில், பைடனின் கடைசி வாரங்களுடன் ஒப்பிடும்போது ரஷிய தாக்குதல்கள் தற்காலிகமாக குறைந்தன. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை மாா்கோ ரூபியோ தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோ தலைமையிலான தூதுக்குழுவை ரியாதில் கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்த பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடையத் தொடங்கின. கடந்த மாதம் ஆரம்பத்தில் அது புதிய உச்சங்களைத் தொட்டது. ஜூலை 9-ஆம் தேதி மட்டும் உக்ரைன் மீது ரஷியா 748 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.
ரஷிய தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து டிரம்ப் பல முறை கண்டனம் தெரிவித்தும், அது, ரஷியாவின் போா் உத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக தாக்குதல் தீவிரமடையத்தான் செய்தது.
அதன்பிறகுதான் ஆக. 8-க்குள் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என ரஷியாவுக்கு டிரம்ப் கெடுவ விதித்தாா். இருந்தாலும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அதை பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.