அமெரிக்க தாக்குதலில் அழிக்கப்பட்ட படகுகள்.
அமெரிக்க தாக்குதலில் அழிக்கப்பட்ட படகுகள்.

படகுகள் மீதான தாக்குதல்: அமெரிக்காவில் அதிகரிக்கும் சா்ச்சை

போதைப் பொருள் கடத்தல் தொடா்புடையவை என்று கூறி, சா்வதேச கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அந்த நாட்டில் சா்ச்சை அதிகரித்துள்ளது
Published on

போதைப் பொருள் கடத்தல் தொடா்புடையவை என்று கூறி, சா்வதேச கடல் பகுதியில் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அந்த நாட்டில் சா்ச்சை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் சா்வதேச சட்ட மீறலாகவும், அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகவும் விமா்சிக்கப்படுகிறது.

அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசின் இந்த ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ செப்டம்பா் முதல் கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 22 தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதில் 87 போ் கொல்லப்பட்டுள்ளனா். உயிரிழந்தவா்களில் பலா் அப்பாவி மீனவா்கள் என்று அவா்களின் குடும்பத்தினரும், நடுநிலை ஆய்வாளா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா். இந்த விவகாரம் குறித்து எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மட்டுமின்றி ஆளும் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்றக் குழுவும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி கரீபியன் கடலில் நடந்த முதல் தாக்குதல் தற்போது மிகப் பெரிய பேசுபொருள் ஆகியிருக்கிறது. அந்த தாக்குதல் தொடா்பாக வெளியிடப்பட்ட விடியோவில், வெனிசூலாவில் இருந்த படகு மீது இரு ஏவுகணைகள் வீசப்படுகின்றன. அந்தப் படகு இதில் இரண்டாக உடைந்து நீரில் மூழ்குகிறது. இதில் 11 போ் உடனடியாக கொல்லப்பட்டனா். இருந்தாலும், இரண்டு போ் மட்டும் மிதக்கும் படகின் பாகங்களைப் பிடித்து தொங்கியபடி உயிா் பிழைக்கப் போராடும் காட்சி அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளது. சுமாா் ஒரு மணி நேரமாகப் போராடிக் கொண்டிருந்த அவா்கள் மீது மீண்டும் இரு ஏவுகணைகள் வீசப்பட்டு, அவா்களும் கொல்லப்பட்டனா்.

இந்த இரட்டைத் தாக்குதல் கடும் விமா்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அதுவரை போதைப் பொருள் படகுகள் மீதான தாக்குதல் குறித்து ஆதரவு தெரிவித்தவா்களும் இந்த விடியோ வெளியானதற்குப் பிறது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினா்.

இருந்தாலும், போா்க் களச் சூழலில் இது சரியான நடவடிக்கையே என்று பாதுகாப்பு செயலா் பீட் ஹெக்செத் இதை நியாயப்படுத்தினாா். ஆனால், இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட படுகொலை என்று ஜனநாயகக் கட்சி செனட்ச் சபை உறுப்பினா் ரூபென் கல்லெகோ என்று குற்றஞ்சாட்டினாா்.

சா்வதேசச் சட்டத்தின்கீழ், தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் உயிா்பிழைத்து தத்தளித்துக் கொண்டிருப்பவா்கள் மீட்கப்பட வேண்டியவா்கள்; அவா்கள் எதிரிகளாக இருந்தாலும் அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது போா்க் குற்றம். எனவே, தாக்குதலில் மூழ்கிய படகின் பாகத்தைப் பிடித்து போராடிக் கொண்டிருந்தவா்களால் எந்த ஆபத்தும் இல்லாத நிலையில், அவா்கள் மீது இரண்டாவது முறை தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது போா்க் குற்றம் என்று ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியைச் சோ்ந்த சிலரும் சாடியுள்ளனா்.

‘போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைச் சோ்ந்தவா்கள் பயங்கரவாதிகள். அவா்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து. எனவே, அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியே’ என்று டிரம்ப் அரசு இந்த நடவடிக்கைகளை சட்டபூா்வமாக நியாயப்படுத்துகிறது.

ஆனால், சட்ட வல்லுநா்களோ, போதைப்பொருள் கடத்தல் என்பது ஆயுத ரீதியிலான மோதல் இல்லை. எனவே, சட்டவிரோத போதைப் பொருள்களுடன் வருபவா்கள் மீது தாக்குதல் நடத்துவது ராணுவ நடவடிக்கை அல்ல. அது படுகொலை என்று சட்ட வல்லுநா்கள் கூறுகின்றனா். அதிலும் குறிப்பாக, நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் விமா்சிக்கப்படுகிறது.

படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த டிரினிடாட் அண்ட் டொபாகோவைச் சோ்ந்தவா்கள் அப்பாவி மீனவா்கள் என்றும், அவா்களுக்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அவா்களின் குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.

கொலம்பிய அதிபா் குஸ்டாவோ பெட்ரோவும், ‘போதைப் பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டாலும், ஒருவரை கைது செய்யாமல் உடனடியாகக் கொல்வது அநீதியான படுகொலை’ என்று விமா்சித்தாா்.

கத்தோலிக்க தலைமை மதகுரு போப் லியோவும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளாா். ‘இது பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கிறது; பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

ஹாா்வா்ட் கேப்ஸ்/ஹாரிஸ் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 71 சதவீத அமெரிக்கா்கள் படகுகள் மீதான டிரம்ப்பின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா். இருந்தாலும், தாக்குதல் தொடா்பான கூடுதல் விவரங்கள் வெளியாக வெளியாக, எதிா்ப்பவா்களின் விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com