

மியான்மரின் சகாயிங் மாகாணத்தில், டீக்கடை மீது ராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்நெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சி நடத்தி வருகின்றது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சகாயிங் மாகாணத்தின் மாயகன் கிராமத்தில் இருந்த டீக்கடையின் மீது கடந்த டிச.5 ஆம் தேதி மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், அங்கு மியான்மர் - பிலிப்பின்ஸ் இடையிலான கால்பந்து போட்டியைக் காண்பதற்காகத் திரண்டிருந்த சிறுவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் இன்று (டிச. 9) தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில், 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 25 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து மியான்மர் ராணுவம் எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்குகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றவுடன் ஏராளமான மக்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தாக்குதல் நடத்தப்பட்ட சகாயிங் மாகாணம் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சிப்படைகளின் கோட்டையாக அறியப்படுகிறது. இருப்பினும், சமீபகாலமாக அங்கு எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என உள்ளூர்வாசிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.