பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணிக்காக விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரரின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில், கடந்த டிச.16 ஆம் தேதி நடைபெற்ற தனியார் போட்டிகளில், இந்தியா, பாகிஸ்தான், கனடா போன்ற பெயர்களில் தனியார் அணிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்து வீரர்கள் இணைந்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பிரபல கபடி வீரர் உபயதுல்லா ராஜ்புட், இந்திய வீரர்கள் அதிகம் இடம்பெற்ற அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்தப் போட்டியில், அவர் இந்திய சீருடை அணிந்து விளையாடியது மற்றும் இந்தியாவின் தேசிய கொடியை அசைத்தது குறித்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியதால், பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பின் தலைவர் ரானா சர்வார் தலைமையில் வரும் டிச.27 ஆம் தேதி நடைபெறும் அவசர கூட்டத்தில், உபயதுல்லா ராஜ்புட்டின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடி சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கபடி வீரர் உபயதுல்லா ராஜ்புட், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
“பஹ்ரைனில் என்னை விளையாட அழைத்து தனியார் அணியில் இணைத்துக் கொண்டனர். ஆனால், நான் இந்தியா எனப் பெயரிடப்பட்ட அணியில் சேர்க்கப்பட்டது முதலில் எனக்குத் தெரியாது. பின்னர், ஒருங்கிணைப்பாளர்களிடம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு தனியார் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றிணைந்து பலமுறை விளையாடியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், பஹ்ரைனில் நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல், சுயவிருப்பத்தின் அடிப்படையில் சென்ற 16 பாகிஸ்தான் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.