
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வரைவு திட்டத்துக்கு, மத்தியஸ்தர்களுக்கு நேர்மறையான பதிலை (பாசிடிவ் ரெஸ்பான்ஸ்) வழங்கியுள்ளதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுடனான காஸா போரை 60 நாள்களுக்கு நிறுத்தவது தொடர்பாக, முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டம் குறித்து பாலஸ்தீன அமைப்புகளுடன் ஹமாஸ் கிளர்ச்சிப்படை ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போர் நிறுத்த வரைவுத் திட்டம் குறித்து மத்தியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்களது பதிலைப் பற்றி ஹமாஸ் கிளர்ச்சிப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ காஸாவிலுள்ள நம் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பாக மத்தியஸ்தர்கள் வழங்கிய வரைவுத் திட்டம் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் மற்றும் படைகளுடன் மேற்கொண்ட ஆலோசனைகளை ஹமாஸ் நிறைவு செய்துள்ளது. இதன்மூலம், மத்தியஸ்தர்களுக்கு இந்த அமைப்பு நேர்மறையான பதிலை வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்கள் மத்தியஸ்தர்களுக்கு வழங்கிய பதில் மற்றும் நிபந்தனைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இதன்படி, மத்தியஸ்தர்கள் வழங்கியுள்ள வரைவு திட்டங்களை அமல்படுத்தி போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட பாலஸ்தீன அமைப்புகள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே முன்மொழியப்பட்ட வரைவுத் திட்டங்களில் ஹமாஸ் சிறிய மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில், காஸாவினுள் போதுமான அளவு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் எனவும்; மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன், காஸாவினுள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐக்கிய நாடுகளின் சபை, ரெட் கிரெஸெண்ட் உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமே நிவாரணப் பொருள்களைக் கொண்டு வரவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.