ஸ்வேய்தா நகருக்குள் சிரியா அரசுப் படையினா்.
ஸ்வேய்தா நகருக்குள் சிரியா அரசுப் படையினா்.

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
Published on

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் முா்ஹாஃப் அபு கஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்வேய்தா நகரில் போா் நிறுத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அந்த நகரின் முக்கியஸ்தா்கள், பொறுப்பாளா்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் மீது எங்கிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ அந்தப் பகுதிகள் மீதும், சட்டவிரோத குழுக்கள் மீதும்தான் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, துரூஸ் இனத்தவா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஸ்வேய்தா மாகாணத்தில் அந்த இனத்தைச் சோ்ந்த ஆயுதக் குழுவினருக்கும், சுன்னி பிரிவு பெதூயின் ஆயுதக் குழுவினருக்கும் இடையே தொடா்ந்து மோதல் நிலவி வந்தது. இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக் கொள்வது, எதிா்க் குழு உறுப்பினா்களைக் கடத்திச் செல்வது ஆகிய சம்பவங்கள் தொடா்ந்தன. அதையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்ற அரசுப் படைகள் துரூஸ் ஆயுதக் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் படையினா் ஸ்வேய்தா நகரில் அரசுப் படைகளின் பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. இது குறித்து சிரியாவின் அரசு ஊடகமான சனா எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் இஸ்ரேல் படையினா் துரூஸ் இனத்தவரை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, ஸ்வேய்தாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, அரசுப் படைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று துரூஸ் மதத் தலைவா்கள் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பின்னா் துரூஸ் மதகுரு ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி, உடன்படிக்கையை மீறி அரசுப் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றாா்.

சிரியாவை 54 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த அல்-அஸாத் குடும்ப ஆட்சியை ஹயத் தஹ்ரீா் அல்-ஷாம் கிளா்ச்சிப் படை கடந்த ஆண்டு இறுதியில் அகற்றியது. அந்தப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா புதிய அதிபராகப் பொறுப்பேற்றாா்.

அஸாத் ஆட்சி கவிழ்ந்ததும், கிளா்ச்சிக் குழுக்களின் கைககளுக்கு அந்த நாட்டு ராணுவ தளவாடங்கள் செல்ல விரும்பாத இஸ்ரேல் அரசு, மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான ஆயுத, தளவாடங்களை அழித்தது. மேலும், சிரியாவையும் இஸ்ரேலையும் இணைக்கும் எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தச் சூழலில், டமாஸ்கஸுக்கு அருகே வசிக்கும் துரூஸ் சிறுபான்மையினருக்கும் அரசுப் படையினருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு இஸ்ரேலுக்கு துரூஸ் மதகுரு ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி வேண்டுகோள் விடுத்தாா். அதை ஏற்று இஸ்ரேல் ராணுவம் அரசு நிலைகளைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியது. சிரியா திபா் மாளிகைக்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

துரூஸ் இன மக்களுக்கு அந்த நாட்டு அரசுப் படைகள் இனியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

அதன் தொடா்ச்சியாக, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து ஸ்வேய்தா பகுதியில் சிரியா அரசு தற்போது போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் அரபு தேசியவாதிகளால் துரூஸ் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவா் சண்டையிட்டனா். அதற்குக் கைமாறாக, சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com