
பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் திட்டமிட்டு, அவர்களுடன் மீதமுள்ள உலக நாடுகளின் அரசுகளும் இணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
மேற்கு கரை மற்றும் காஸா நகரத்தின் மீதான, இஸ்ரேலின் தாக்குதல்களினாலும், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் முடக்கப்பட்டுள்ளதாலும், ஏராளமான பாலஸ்தீனர்கள் பலியாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென, சர்வதேச அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் மீண்டும் இருநாட்டு தீர்வு (Two state solution) கொண்டுவரப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று (ஜூலை 29) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் முடிவு செய்த தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அந்த அறிக்கையில், ஸ்பெயின், நார்வே, ஃபின்லாந்து ஆகிய 15 நாடுகளின் அரசுகள், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் இருநாட்டு தீர்வுகள் கொண்டுவர உறுதியாகவுள்ளதாகக் கூறியுள்ளன.
இதுகுறித்து, பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜீன் நோயல் பார்ரொட் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்புவதாகவும், இதில், இதுவரை இணையாத மற்ற நாடுகளும், தங்களுடன் இணைய அழைப்பதாகவும், அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், பாலஸ்தீனத்தை தனிநாடாக வரும் செப்டம்பரில் அங்கீகரிக்கப்போவதாகக் கூறியிருந்தார். இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மேலும், காஸா மீதான தாக்குதல்களையும், முடக்கங்களையும் இஸ்ரேல் நிறுத்தவில்லையென்றால், பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், நேற்று (ஜூலை 29) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.