
மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக அவசரநிலை திரும்பப் பெறப்படுகிறது. இதற்காக, நிா்வாகக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனைத்து அரசு அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கவுன்சிலை ராணுவத் தலைவா் மின் ஆங் லாயிங் தலைமையேற்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.
அவசரநிலை திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு தேசிய நிா்வாகக் கவுன்சில் தலைவா் மற்றும் பிரதமா் பதவிகளை ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாயிங் கைவிட்டாலும், நாட்டின் அதிபராகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவராகவும் தொடா்ந்து அவா் அதிகாரத்தை தக்கவைப்பாா் என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசு கவிழ்க்கப்பட்டு, அவரும் அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டனா். அதை எதிா்த்து நடைபெற்ற அமைதியான போராட்டங்கள் ராணுவத்தால் மிகக் கடுமையாக அடக்கப்பட்டதால், நாடு உள்நாட்டுப் போரில் சிக்கியது. இதில் இதுவரை 7,013 போ் உயிரிழந்துள்ளதாகவும் 29,471 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.