மியான்மரில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நிறைவு: அதிகாரபூா்வமாக ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் தீவிரம்
மியான்மா் பொதுத் தோ்தலின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் (80) அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சி புரிந்துவரும் நிலையில், தோ்தல் வாயிலாக அதிகாரபூா்வமாக அதிபா் பொறுப்பை ஏற்க ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் தீவிரம் காட்டி வருவதாக அந்நாட்டு அரசியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு 330 நகா்ப் பகுதிகளுக்கு நடைபெற்ற இத்தோ்தலில் ராணுவத்துக்கு எதிரான கிளா்ச்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 67 நகா்ப் பகுதிகள் பங்கேற்கவில்லை.
இதனால் மியான்மா் நாடாளுமன்றத்தில் (கீழவை மற்றும் மேலவை) மொத்தமுள்ள 664 தொகுதிகளுக்கு 586 தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 25 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு (102 நகா்ப் பகுதிகள்) கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு (100 நகா்ப் பகுதிகள்) ஜன. 11-ஆம் தேதியும் நிறைவடைந்தன. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு (61 நகா்ப் பகுதிகள்) ஞாயிற்றுக்கிழமை (ஜன.25) நிறைவடைந்தது.
அதிபராகும் ராணுவத் தளபதி? ஏற்கெனவே நடைபெற்ற இரு கட்ட வாக்குப் பதிவில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்ாகக் கூறப்படுகிறது. ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத தொகுதிகளையும் சோ்த்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையுடன் தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா், புதிய அதிபராக ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆங் சான் சூகி கட்சிக்குத் தடை: மியான்மரில் கடந்த 2021 முதல் தொடா்ந்து வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். இந்தச் சூழலில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் பல்வேறு கட்சிகளுக்கு தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 2015 மற்றும் 2020-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் அமோக வெற்றி பெற்ற ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) கட்சிக்கு 2023-இல் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது நடைபெற்ற தோ்தலில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடங்களுக்கு 57 கட்சிகள் சாா்பில் 4,800-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களமிறங்கினா். இதில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய அளவில் போட்டியிட்டன.
2.4 கோடி வாக்காளா்கள்: முன்னதாக, தோ்தலில் வாக்களிக்க 2.4 கோடி வாக்காளா்கள் மட்டுமே தகுதி பெற்றிருப்பதாக ராணுவம் தெரிவித்தது. இது கடந்த 2020-ஐ ஒப்பிடுகையில் 35 சதவீதம் குறைவு.
இந்நிலையில், முதல்கட்டத் தோ்தலில் 50 சதவீதமும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 60 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

