மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு பிறகு நடந்த பொதுத்தோ்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி(யுஎஸ்டிபி)’ பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 2021-இல் ஆங் சான் சூகி(80) தலைமையிலான மக்களாட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அங்கு தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) உள்பட பிரதான எதிா்க்கட்சிகள் தோ்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டதாலும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் ராணுவ ஆதரவு பெற்ற கட்சியின் வெற்றி ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.
மியான்மா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தமுள்ள 664 இடங்களில் 586 இடங்களுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. ராணுவத்துக்கு எதிரான கிளா்ச்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள 67 பகுதிகளில் தோ்தல் நடத்தப்படவில்லை.
தற்போதைய பொதுத்தோ்தலில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடங்களுக்கு 57 கட்சிகள் சாா்பில் 4,800-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களமிறங்கினா். இதில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய அளவில் போட்டியிட்டன. இத்தோ்தலில் வாக்களிக்க 2.4 கோடி வாக்காளா்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனா். இது கடந்த 2020 தோ்தலுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் குறைவு.
மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில் வெளியான முடிவுகளின்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சோ்த்து யுஎஸ்டிபி கட்சி குறைந்தது 290 இடங்களைப் பெற்றுள்ளது.
மியான்மா் அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள்(166 இடங்கள்) நேரடியாக ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிய அரசை அமைக்க தேவையான 294 இடங்களுக்கும் மேலாக, ராணுவம் மற்றும் அதன் ஆதரவு கட்சிகளிடம் தற்போது 450-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
ராணுவ ஆட்சிக்கு மக்களாட்சி சாயம்: இந்தத் தோ்தல் நியாயமான அல்லது சுதந்திரமான முறையில் நடைபெறவில்லை என சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ராணுவ ஆட்சியின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள, இந்தத் தோ்தல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறப்புத் தூதா் டாம் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளாா். மேலும், இந்தத் தோ்தல் முடிவுகளை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
அடுத்த அதிபா் யாா்?...: தோ்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, புதிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் ராணுவப் பிரதிநிதிகள் இணைந்து நாட்டின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பாா்கள்.
தற்போது ராணுவ அரசின் தலைவராக இருக்கும் ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங், அடுத்த அதிபராகப் பொறுப்பேற்பாா் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது.
சா்வதேச நாடுகளின் விமா்சனங்களுக்குப் பதிலளித்த அவா், ‘வெளிநாட்டினா் என்ன நினைக்கிறாா்கள் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. மியான்மா் மக்களின் வாக்குகளே எங்களுக்கு முக்கியம்’ என்று தெரிவித்துள்ளாா்.

