

மியான்மரில் நீண்டகால தாமதத்துக்குப் பிறகு மூன்று கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் பங்கேற்பின்றி நடைபெறும் இந்தத் தேர்தல், ஜனநாயகம் என்கிற போர்வையில் முழுமையாக ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதற்கான முயற்சியாகத்தான் ஐ.நா. மற்றும் பல சர்வதேச அமைப்புகளால் பார்க்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கட்சி 2020 பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அவரது கட்சி தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக ஆட்சியைக் கலைத்த ராணுவம், ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தேர்தல் மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
2021 தொடக்கம் முதல் மியான்மரில் ராணுவம்தான் ஆட்சியை நடத்தி வருகிறது. சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்டுக்குள் தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் அறிவித்தது. ஆனால், நாட்டின் பல பகுதிகளில் கிளர்ச்சிக் குழுக்கள், பல்வேறு இனச் சிறுபான்மையினருடனான ராணுவத்தின் சண்டையால் தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறி தேர்தலைத் தள்ளிப்போட்டு வந்த நிலையில், இப்போது ஒருவழியாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 28-இல் முதல்கட்டத் தேர்தலும், ஜனவரி 11-இல் இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. மூன்றாம் கட்டத் தேர்தல் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நாடு முழுவதும் தேர்தல் நடத்த ராணுவ ஆட்சியாளர்களால் முடியவில்லை. மொத்தம் உள்ள 330 நகராட்சிப் பகுதிகளில் 265 நகரங்களில்தான் தேர்தல் நடைபெறுகிறது. உள்நாட்டு சண்டை நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை.
ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக முன்னணி கட்சி உள்பட பெரும்பாலான முக்கியமான கட்சிகள் கலைக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் சிறிய கட்சிகளும், ராணுவ ஆட்சியாளர்கள் அங்கீகரித்த கட்சிகளுமே களத்தில் உள்ளன. குறிப்பாக, ராணுவத்தின் நிழலாகக் கருதப்படும் யூனியன் ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி (யுஎஸ்டிபி) பிரதான கட்சியாகப் போட்டியிடுகிறது. தேர்தலில் 1,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அந்தக் கட்சி போட்டியிடச் செய்திருக்கிறது.
முன்னாள் ராணுவ ஜெனரல்களால் நடத்தப்படுகிறது யுஎஸ்டிபி. முதல்கட்டத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட 102 நாடாளுமன்ற கீழவை இடங்களில் 90 இடங்களில் யுஎஸ்டிபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 31 மேலவை இடங்களில் 21-ஐ அந்தக் கட்சி வென்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் பலவற்றைத் தடை செய்து, பல ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினரை அரசியல் கைதியாக சிறையில் அடைத்து, சுதந்திரமோ, பேச்சுரிமையோ இல்லாமல் நடத்தப்படும் இந்தத் தேர்தல் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் அல்ல என்று பிரிட்டன், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐ.நா. உள்ளிட்டவை நிராகரித்துள்ளன.
முதல்கட்டத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பதே, நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு ஆதாரம் என ராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், உள்நாட்டுப் போர் காரணமாக, தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நான்கில் மூன்று பங்கு நகரங்களில் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான உள்கட்டமைப்புகூட இல்லை. அதனால், இந்த வாக்குப் பதிவு சதவீதமே பொய்யாக இருக்கலாம் என சர்வதேச அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
ராணுவத்துக்கும், பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான போரால் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வசிக்கின்றனர் அல்லது அண்டை நாடுகளான தாய்லாந்து, வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றுவிட்டனர். அவர்களால் வாக்களிக்க முடியாத சூழலில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவை எப்படி நம்ப முடியும் என்பது அவர்களின் கேள்வி.
தேர்தலை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டத்தையும் ராணுவ ஆட்சியாளர்கள் அமல்படுத்தியுள்ளனர். அதன்படி, தேர்தல் புறக்கணிப்பு என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையையோ, சுவரொட்டிகளையோ ஒட்டக் கூடாது. "புரட்சி' என்கிற வார்த்தையை பொதுவெளியில் உச்சரித்தாலே குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
மியான்மரில் மனித உரிமை சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்த ஐ.நா. சிறப்பு நிருபர் டாம் ஆண்ட்ரூஸ் அண்மையில் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், "முதல்கட்டத் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையாக உள்ளன; சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட தேர்தலில் பங்கேற்குமாறு மியான்மர் மக்கள் மீது பெரும் அழுத்தத்தைக் கொடுத்து நடத்தப்பட்டுவரும் நாடகம் இது' எனக் கூறியுள்ளார்.
தேர்தல் நிறைவடைந்த பின்னர், வரும் மார்ச்சில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, தற்போதைய ராணுவ ஆட்சியின் தலைவர் மின் ஆங் லயிங் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. ஜனநாயகப் போர்வையில் ராணுவ ஜெனரல் அதிபராக உருவாகவுள்ளார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.