பிரிட்டன் மன்னர், ஐரோப்பிய தலைவர்களை சந்திக்கிறார் ஸெலென்ஸ்கி!

பிரிட்டனில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவாக 3 முக்கிய முடிவுகள்
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிX | Keir Starmer
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு பிறகு பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்ளார்.

லண்டனில் இன்று (மார்ச் 2) நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் ஐரோப்பிய தலைவர்களை சந்திப்பதற்காக, சனிக்கிழமை பிரிட்டன் சென்றார். மேலும், சனிக்கிழமையில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்தித்து, உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை விரைவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, முதல் தவணை நிதி அடுத்த வாரம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்ததாவது ``உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பில், உக்ரைன் மீது அசைக்க முடியாத எனது ஆதரவை உறுதியாகக் கொள்கிறேன். மேலும் உக்ரைனுக்கு தேவையான திறன், பயிற்சி, உதவிகளை வழங்குவதற்கான எனது உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவேன்.

உக்ரைனுக்கு வழங்கப்படும் உதவியை உறுதிப்படுத்துவதற்கும், ஐரோப்பியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் ஒன்றுபட வேண்டிய நேரமிது’’ என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, இன்று நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் உக்ரைனின் குறுகிய காலத் தேவைகள், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நீடித்த ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான திட்டமிடல் ஆகிய 3 முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, ரஷியாவுடனான பேச்சுவார்த்தையின்போது நேட்டோவில் இருக்கும் எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுக்காதது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றம் அளித்தது.

போரில் சம்பந்தப்பட்ட உக்ரைனைக்கூட அழைக்கவில்லை என்பதுதான் பெருந்துயரம். இதுவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதிருப்திக்கு வித்திட்டது என்கின்றனர் சிலர்.

இதனிடையே, உக்ரைனில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு உக்ரைனுக்காக பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும் என ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நிபந்தனைகள் விதிக்கும் நிலையில் உக்ரைன் இல்லை எனவும் தாங்கள் சொல்வதைக் கேட்டு கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தவிர ஸெலென்ஸிக்கு வேறு வழியில்லை என்றும் டிரம்ப்பும் ஜே.டி. வான்ஸும் கூறினா்.

தங்களை மறுத்து பேசுவதன் மூலம் அமெரிக்காவை ஸெலென்ஸ்கி அவமதிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இந்த காரசார விவாதத்தின் விளைவாக, தங்கள் நாட்டு கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே ஓவல் அலுவலகத்தைவிட்டு ஸெலென்ஸ்கி வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com