கிரீன்லாந்து: அமெரிக்க எதிர்ப்புக் கட்சிகள் வெற்றி!
நூக்: டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தோ்தலில் எதிா்பாராத விதமாக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
செல்போன் முதல் பல்வேறு தொழிநுட்பங்களை தயாரிப்பதற்கு தேவையான தாது வளம் நிறைந்த தீவுப் பகுதியாக கிரீன்லாந்து இருக்கிறது. மேலும், வடக்கு அட்லாண்டிக்கின் வான் மற்றும் கடல் பாதைகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், கனடா, கிரீன்லாந்து நாடுகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அந்நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ள ராணுவ நடவடிக்கையோ, பொருளாதார நடவடிக்கையோ எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் வரலாற்று வெற்றி
இந்த நிலையில், கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலானது டிரம்பின் சூளுரையையும் டென்மார்க்கிடம் இருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதையும் மையப்படுத்தி எதிர்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக பிரசாரத்தை முன்னிறுத்திய ஜனநாயகக் கட்சியும், நலேராக் கட்சியும் முதல் இரு இடங்களைக் கைப்பற்றின.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெறும் 9% வாக்குகளை பெற்ற ஜனநாயகக் கட்சி தற்போது 30 சதவிகிதமும், 12% வாக்குகளை பெற்றிருந்த நலேராக் கட்சி தற்போது 25 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல
கிரீன்லாந்து தேர்தல் முடிவானது, டென்மார்க் விற்பனைக்கு இல்லை என்பதை தெளிவான செய்தியை டிரம்புக்கு அளித்திருக்கிறது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஃபிரைடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, “நாங்கள் அமெரிக்கர்களாகவோ டென்மார்க் மக்களாகவோ இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து மக்களாக இருக்க விரும்புகிறோம். எதிர்காலத்தில் எங்களில் முழு சொந்த சுதந்திரத்தை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் சொந்த நாட்டை நாங்களே கட்டியெழுப்ப விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் எச்சரிக்கை
கிரீன்லாந்தில் அமெரிக்க எதிர்ப்புக் கட்சிகள் வெற்றி பெற்றதற்கு டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோயல்ஸ் லுண்ட் பவுல்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், ”புதிய கிரீன்லாந்து அரசாங்கம், அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். டென்மார்க் அரசாங்கத்தில் நீங்கள் பங்கேற்க முடியாது. கிரீன்லாந்தின் எதிர்காலம், கிரீன்லாந்து மக்களும் அரசாங்கமும் விரும்புவதை அடிப்படையாகக் கொண்டது” எனத் தெரிவித்தார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயகக் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டென்மார்க் அரசு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான இரு கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது டிரம்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், கிரீன்லாந்து அரசுக்கு இடையூறு அளிக்கும் வகையிலான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.