
உக்ரைன் - ரஷிய போர் நிறுத்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் எதிர்பார்த்த முடிவு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக, சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 7 மணிநேரம் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
ரஷியாவுடன் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் 30 நாள்கள் போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட வேண்டும், உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.
இந்த நிலையில், உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “போர் நிறுத்தம் குறித்த முடிவுக்கு ரஷியா தயாராக இருக்கிறது. அதற்கான ஏற்பாட்டின் விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். போருக்கான காரணங்களை சரிசெய்ய தயாராக இருக்கிறோம்.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு
போர் நிறுத்தத்துக்கு முன்னதாக அதைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கென தனிக்கவனம் செலுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் அனைவரும் சமாளிக்க போதுமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், சீனா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் போர் நிறுத்தத்துக்காக அதிக நேரத்தை நமக்காக செலவிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். போரை நிறுத்துவது குறித்த முடிவுக்கு நாங்கள் உடன்படுகிறோம். இது நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் என்பதே எங்களின் நிலைப்பாடாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து பிரதமர் மோடியும் உக்ரைன் அதிபரிடம் போர் நிறுத்தம் குறித்து பலமுறை பேசியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் அமெரிக்க சென்று அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தபோது இந்தியா நடுநிலை வகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர், “இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. ஆனால், அமைதியின் பக்கம் இருக்கிறது. நான் ஏற்கனவே அதிபர் புதினிடம் கூறியிருக்கிறேன். இது போருக்கான காலம் கிடையாது. டிரம்ப்பின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.