ஜேடி வான்ஸ் / உஷா வான்ஸ்
ஜேடி வான்ஸ் / உஷா வான்ஸ்

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

கிரீன்லாந்து மக்கள் ஜேடி வான்ஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Published on

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் இன்று கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைப் பார்வையிடச் செல்கின்றனர்.

கிரீன்லாந்தில் நடக்கும் நாய் பந்தயத்தைக் காண சுற்றுப்பயணம் செல்வதற்கு உஷா வான்ஸ் முன்பு திட்டமிட்டிருந்தார். பின்னர் ஜேடி வான்ஸ் கிரீன்லாந்து பயணத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகின. 3 நாள்களுக்கு திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் பற்றி கிரீன்லாந்து அரசிடம் முன்னறிவிப்பு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கிரீன்லாந்து மீது அமெரிக்கா கட்டுப்பாடு செலுத்தவேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறிய நிலையில் தான் பதவிக்கு வந்தவுடன் கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் கொண்டுவருவேன் என முன்பு தெரிவித்திருந்தார்.

கிரீன்லாந்து டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தன்னாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாகும். ஐரோப்பிய யூனியனின் கீழ் வரும் இந்தப் பிரதேசத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்வது அங்குள்ள மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால், வான்ஸ் வருகைக்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, வான்ஸ் அவரது மனைவியுடன் செல்வதாக இருந்த சுற்றுப்பயணம் ஒரு நாளாகக் குறைக்கப்பட்டது. இதில், அமெரிக்க ராணுவ தளத்தை மட்டும் அவர்கள் பார்வையிடச் செல்வதாகவும், அங்குள்ள அதிகாரிகளுடன் சந்திப்பு எதுவும் நடைபெறாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைப்பதற்கு அங்குள்ள மக்களை சம்மதிக்க வைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியது இந்தப் பிரச்னையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

அமெரிக்க - டென்மார்க் இடையேயான இத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு நடுவே வான்ஸ் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com