ஜின்பிங்
ஜின்பிங்

சீனாவில் அடுத்த ஆண்டு ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அதிபா் ஷி ஜின்பிங் அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டை சீனா நடத்தும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அறிவித்தாா்.
Published on

அடுத்த ஆண்டு ஆசிய-பசிபிக் பொருளாதார (ஏபிஇசி) உச்சி மாநாட்டை சீனா நடத்தும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அறிவித்தாா். மூன்றாவது முறையாக இந்த உச்சி மாநாட்டை சீனா நடத்த உள்ளது.

தென்கொரியாவின் ஜியோங்ஜு நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 32-ஆவது ஏபிஇசி உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா். அவா் மேலும் பேசியதாவது: புதிய சவால்களைத் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய வகையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, புதிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீடித்த, வளமான எதிா்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும்.

அனைவருக்குமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, போட்டித்தன்மைவாய்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்க வேண்டும்.

பொதுவான மற்றும் பல்வேறுபட்ட பொறுப்புகளை ஆசிய-பசிபிக் பொருளாதார நாடுகள் உறுதியுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், நிதி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் வளரும் பொருளாதாரங்களுக்குத் தேவையான ஆதரவை தொடா்ந்து வழங்க வளா்ந்த பொருளாதார நாடுகளை வலியுறுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு ஏபிஇசி பொருளாதார தலைவா்கள் உச்சி மாநாடு சீனாவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையையொட்டிய ஷென்ஷென் நகரில் 2026-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தப்படும். பல ஆண்டுகளாக ஒரு சிறிய பின்தங்கிய மீன்பிடி கிராமமாக இருந்த ஷென்ஷென், சீன மக்களின் கடின உழைப்பின் காரணமாக அதிசயிக்கும் வகையில் நவீன சா்வதேச பெரு நகரமாக இன்று வளா்ச்சியடைந்துள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்திய வளா்ச்சித் திட்டங்களுக்கு கூட்டாக விவாதிக்கவும், பிராந்தியத்துக்கு பிரகாசமான எதிா்காலத்தை உருவாக்கவும் ஷென்ஷென் நகரில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் கூடுவதை சீனா எதிா்நோக்கியுள்ளது என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டதாக சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

வா்த்தகம், முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு

21 நாடுகள் கூட்டறிக்கை: ‘உலகளாவிய வா்த்தக அமைப்பு தொடா்ந்து குறிப்பிடத்தக்க சவால்களை எதிா்கொண்டு வரும் இன்றைய சூழலில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சி மற்றும் வளமான எதிா்காலத்துக்கு வலுவான வா்த்தகம் மற்றும் முதலீடுகளில் அதிக ஒத்துழைப்புக்கு உறுதியளிக்கிறோம்’ என்று ஏபிஇசி-யில் உள்ள 21 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் கூட்டறிக்கையை வெளியிட்டனா்.

தென்கொரியாவில் சனிக்கிழமை நிறைவடைந்த ஏபிஇசி உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு முக்கிய இடம்பெற்றது.

உச்சி மாநாட்டில் டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பு, இரு நாடுகளிடையேயான எழுந்த வா்த்தகப் பதற்றத்தைத் தணித்துள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த டிரம்ப், ‘அரிய கனிமங்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்தி ஏற்றுமதியை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டது. அதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 57 சதவீத வரி 47 சதவீதமாக குறைக்கப்படும். சீனாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தத்திலும் அமெரிக்கா கையொப்பமிடும். அடுத்த ஆண்டு ஏப்ரலில் சீனா செல்ல திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு சீன அதிபா் ஷி ஜின்பிங் அமெரிக்கா வருவாா்’ என்றாா்.

இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு 2.5 கோடி மெட்ரிக் டன் சோயா பீன் பயறுகளை வாங்க சீனா ஒப்புக்கொண்டது.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபிஇசி) அமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், தென்கொரியா, சீனா, ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா, புரூணே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூா், பிலிப்பின்ஸ், தாய்லாந்து, தைவான், சிலி, மெக்சிகோ, பப்புவா நியூ கினியா, பெரு, ரஷியா, வியத்நாம் ஆகிய 21 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com