

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று, ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியாவும் சீனாவும் குறைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான போரில், ரஷிய எண்ணெய்யை அதிகளவில் கொள்முதல் செய்து இந்தியாவும், சீனாவும் அந்நாட்டுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருவதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.
மேலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்காக இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரியும் டிரம்ப் விதித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சில நாள்களாக ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் கரோலின் லீவிட், சீனாவும் ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
“ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துள்ளதாக இன்று காலை சர்வதேச ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தேன். அதிபர் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவும் இதைச் செய்துள்ளது. ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
புதின் - டிரம்ப் சந்திப்பு குறித்து பேசிய லீவிட், “இரு தலைவர்களின் சந்திப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை. மீண்டும் சந்திப்பு நடைபெறும் என்று அதிபர் டிரம்ப்பும், அமெரிக்க நிர்வாகமும் நம்புகிறது. அந்த சந்திப்பில், நேர்மறையான முடிவு இருப்பதை உறுதி செய்யவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்க அரசு புதன்கிழமை பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.