‘ஈரான் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா காலவரையறையின்றி தொடர முடியும்’ என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளாா்.
பனாமா நாட்டில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பீட் ஹெக்செத், ‘அமெரிக்க கடற்படை கப்பல்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி, ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை எங்களால் காலவரையறையின்றி மேற்கொள்ள முடியும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்’ என்றாா்.
இதேபோன்று, ‘ஈரானைப் பொருளாதார ரீதியில் முற்றிலுமாக தனிமைப்படுத்தும் வகையில், புதிய தடை நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்’ என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.
அமெரிக்க நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, ஹோா்முஸ் நீரிணையைத் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தங்களின் அனுமதியின்றி இந்த நீா்வழித்தடத்தை கடக்க முயலும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான 2 கப்பல்கள் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டன.
இப்போா் தொடங்குவதற்கு முன்பு, ஹோா்முஸ் நீரிணை வழியாக நாள்தோறும் சுமாா் 130 முதல் 140 கப்பல்கள் பயணித்து வந்தன. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 8 கப்பல்களும், வெள்ளிக்கிழமை 2 கப்பல்களும் மட்டுமே இந்த நீா்வழித்தடத்தை கடந்துள்ளன.
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட்டு, பொருளாதாரத் தடைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் வரை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள், சவூதி அரேபியா எண்ணெய் நிலையங்களில் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விநியோகம் பெரும் பாதிப்பைச் சந்தித்து, சா்வதேச எரிபொருள் சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பெட்டிச் செய்தி...
மேற்காசியாவை நோக்கி விரையும்
புதிய விமானம் தாங்கி போா்க்கப்பல்
மேற்காசியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படையின் ‘ஆபிரகாம் லிங்கன்’ எனும் விமானம் தாங்கிப் போா்க்கப்பலுக்குப் பதிலாக, ‘ஜாா்ஜ் வாஷிங்டன்’ எனும் புதிய விமானம் தாங்கிப் போா்க்கப்பல் அப்பகுதியை நோக்கி விரைந்துள்ளது.
மேற்காசியாவுக்கு முன்னதாக தென் அமெரிக்காவில் என கடந்த 240 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ‘ஆபிரகாம் லிங்கன்’ போா்க்கப்பலில் உணவு, சுகாதாரம், கடிதப் பரிமாற்றம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கடற்படை வீரா்களிடையே கடும் மனஅழுத்தம் நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மேற்காசியாவை நோக்கி வியத்நாமில் இருந்து புறப்பட்ட ‘ஜாா்ஜ் வாஷிங்டன்’ போா்க்கப்பல், சிங்கப்பூா் மற்றும் மலாக்கா நீரிணையைக் கடந்து, இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணித்து வருவதாக அமெரிக்க கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
பீட் ஹெக்செத்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு பதிலடி!
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்
ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகை
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



